சென்னை சங்கமம் நிகழ்ச்சியும்! கனிமொழி வருத்தமும்! லயோலா மேடையில் உணர்ச்சிவசம்!
சென்னை: சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறா விட்டாலும் கூட, அதனுடைய வெற்றியை காண்பதாக கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார்.
சென்னை சங்கமம் தொடர்பாக கனிமொழி தனக்குள் இருக்கும் வருத்தத்தை சூசகமாக பொதுமேடையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதனிடையே சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்கு பதிலாக இந்தாண்டு நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் பொங்கல் கலை நிகழ்ச்சிகளை தமிழ் பண்பாட்டு மற்று கலாச்சாரத்துறை நடத்துகிறது.

சென்னை சங்கமம்
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் பொங்கலை ஒட்டி சென்னை சங்கமம் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அரசு உதவியுடன் நடத்தி வந்தார் கனிமொழி. இந்நிலையில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்த விழா கைவிடப்பட்டது. இதனிடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்து முதல் பொங்கலை கொண்டாடும் சூழலில், மீண்டும் சங்கமம் விழாவை நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்தார் கனிமொழி எம்.பி.

தங்கம் தென்னரசு
ஆனால் ஏற்கனவே சங்கமம் விழா சர்ச்சையில் சிக்கியதால் மீண்டும் அந்தப் பெயரில் விழாவை நடத்த விரும்பாத முதலமைச்சர் ஸ்டாலின், நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் பொங்கல் கலை நிகழ்ச்சிகளை தமிழ் பண்பாட்டு மற்று கலாச்சாரத்துறை மூலம் நடத்தவிருக்கிறார். இதற்கான பணிகளை துறை அமைச்சரான தங்கம் தென்னரசு முன்னெடுத்து செய்து வருகிறார்.

சென்னை சங்கமம்
இந்நிலையில் இன்று சென்னை லயேலா கல்லூரியில், பேரிடரால் வாழ்வாதாரம் இழந்த கலைஞர்களை பேணிக்காக்க 9-ம் ஆண்டு வீதி விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில், திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் ரோஸ், நீங்கள் மறுபடியும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை தொடங்க வேண்டும். சென்னை சங்கமத்தை மீண்டும் நடத்தினால், இந்த நிகழ்ச்சிகளை நிறுத்திவிடுவோம், என்று கோரிக்கை விடுத்தார்.

கனிமொழி பதில்
அதற்கு பதிலளித்து பேசிய கனிமொழி, இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று தான் "சென்னை சங்கமம்" தொடங்கப்பட்டது. சென்னை சங்கமம் தொடர்ந்து நடைபெறா விட்டாலும், அதனுடைய வெற்றி இந்த மேடையில் தான் இருக்கிறது, என்று கூறினார். மேலும் கலைஞர்கள் மீது நாம் கவனம் வைக்க வேண்டும், என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications