இந்த உலகம் இரட்டை நிலைப்பாட்டை காட்டும் போது! அம்மா உன் மடிதான் எனக்கு புகலிடம்! கனிமொழி வாழ்த்து
சென்னை: இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைப்பாட்டை காட்டும் போதெல்லாம் என் தாய் ராசாத்தி அம்மாளின் மடிதான் எனக்கு புகலிடம் என அன்னையர் தினத்தில் தனது தாயுடனான புகைப்படத்தை பகிர்ந்து திமுக எம்பி கனிமொழி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அவர் இதுவரை எதையுமே கேட்டதில்லை, ஆனால் தன்னிடம் இருந்ததையெல்லாம் எனக்கு கொடுத்திருக்கிறார். இன்றும் கூட ஒவ்வொரு இரவும் எனக்காக காத்திருக்கிறார், எப்போது வருவாய் என்ற கேள்விக்கு முன், ஏதேனும் சாப்பிட்டாயா என கேட்க மறந்ததேயில்லை. இந்த உலகம் அதன் வெட்கமற்ற இரட்டை நிலைபாட்டை காட்டும் போதெல்லம் அவர் மடிதான் எனக்கு புகலிடம். வலிமையும், கதகதப்பும், அன்பும், அஞ்சாமையும் ஒரு சேர அள்ளித் தருபவர் அவர்.

இன்றும் அவர் கற்றுத்தந்த பாடத்தையும், மனஉறுதியையும் மறக்காமல் துணைக்கு அழைத்துச் செல்கிறேன். வாழ்வும், அரசியலும் உருவாக்கிய இடைவெளியை அவரது அரவணைப்பில் நிரப்பிக் கொள்கிறேன். இந்த நாள் இப்படியாக உங்கள் வாழ்வை செதுக்கிய ஒவ்வொரு பெண்ணுக்குமானது. இனிய அன்னையர் தின வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அன்னையர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தனது ராசாத்தி அம்மாளுக்கு வாழ்த்துகளை கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
அரசியல் பயணமாக வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் போனை போட்டு அம்மா கேட்கும் கேள்வி சாப்பிட்டியா என்பதுதான் என நிறைய பேட்டிகளில் கனிமொழி தெரிவித்துள்ளார். சிறிய வயதில் இருந்தே மகளுக்கு அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்தவர் ராசாத்தி அம்மாள்!
ராசாத்தி அம்மாள் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர். முன்னாள் கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாளுக்கும் கடந்த 1968 ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கனிமொழி பிறந்தார். இவர் சிஐடி காலனியில் வசித்து வருகிறார். முதல்வராக ஸ்டாலின் தேர்வான போது தனது பிறந்தநாளின் போது, தனது தந்தையின் நினைவுநாள், பிறந்தநாளின் போது மு.க.ஸ்டாலின், சிஐடி காலனிக்கு வந்து ராசாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றுவிட்டுச் செல்வார். அது போல் அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர், துணை முதல்வரானதும் தனது பாட்டியை சந்தித்து ஆசியையும் வாழ்த்துகளையும் பெற்றார்.
கருணாநிதி மறைந்ததும் ராசாத்தி அம்மாளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். தற்போதும் கருணாநிதியின் சமாதிக்கு நினைவுநாள் அன்று சென்றால் கண்களை குளமாக்கிக் கொள்வார். கனிமொழி அரசியலில் இறங்கியதும் அவரது மகனும் பேரனுமான ஆதித்யாவை பார்த்துக் கொண்டதும் ராசாத்தி அம்மாள்தான்!












Click it and Unblock the Notifications