வேலை பறிபோனால் 2 மாதத்தில் பிஎஃப் பணம் எடுக்க முடியாது.. மாறிய விதிகள்.. கனிமொழி கடும் எதிர்ப்பு
டெல்லி: வேலை இல்லாமல் போனால் 2 மாதத்தில் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது என்றும் 12 மாதங்கள் காத்திருந்துதான் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு விதிகளை மாற்றி உள்ளது. இந்த விதி மாறியதால், வேலை இழந்தால், பிஎஃப் பணத்தை எடுத்து வாழ்க்கையை ஓட்டலாம் என்று நம்பிக்கையுடன் இருந்த பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்று திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வேலையின்மை காரணமாக பிஎஃப் பணத்தை முன்கூட்டியே முழுமையாக எடுப்பதற்கு உள்ள கால வரம்பை ஏற்கனவே இருந்த இரண்டு மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரித்துள்ளது. அதாவது இனி மேல் வேலையை இழந்தால் உடனே பிஎஃப்பில் பணம் எடுக்கவே முடியாது. 12 மாதங்கள் வரை வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே பிஎஃப்பில் பணத்தை மொத்தமாக எடுக்க முடியும்.

அதுபோலவே, ஓய்வூதியத் தொகையை முழுமையாக எடுப்பதற்கான குறைந்தபட்ச கால வரம்பும், வேலையை இழந்த பின்னர் இரண்டு மாதங்களாக இருந்தது. அது தற்போது 36 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கல்வி, நோய், வீட்டு வசதி மற்றும் சிறப்புச் சூழ்நிலைகளுக்கான பணம் எடுக்கும் விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மாற்றங்கள் - அடுத்த 1-2 மாதங்களில் அமலுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் மத்திய அரசு கொண்டுவரும் புதிய விதிகளின்படி, உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பில் குறைந்தபட்சம் 25 சதவிகிதத்தை எப்போதும் நிதியில் வைத்திருக்க வேண்டும். வேலையின்மையின் போது முழுத் தொகையையும் எடுப்பதால் குறைந்து போகும் ஓய்வூதிய நிதியைக் கூட்டுவதற்காக இந்த மாற்றங்களை அரசு செய்திருக்கிறதாம்.
பிஎஃப் உறுப்பினர்களில் சுமார் 50 சதவிகிதத்தினர் இறுதியில் வெறும் ₹20,000-க்கும் குறைவாகவே வைத்துள்ளனர். ஓய்வூதியம் எடுப்பவர்களில் 75 சதவிகிதத்தினர் நான்கு ஆண்டுகளுக்குள் தொகையை எடுத்துவிடுவதால் மாற்றங்களை அரசு கொண்டு வந்துள்ளதாம். அதேபோல் இரண்டு மாதங்களுக்குப் பிறகு (வேலையின்மையின் போது) முழு பிஎஃப் தொகையையும் எடுத்துவிட்டு, அதே நபர் மீண்டும் வேறொரு நிறுவனத்தில் சேருகிறார். இதன் மூலம், உறுப்பினர்கள் முழுத் தொகையையும் எடுத்துவிட்டு, ஓய்வூதியத்திற்குத் தகுதியற்றவர்களாகி, தங்களுக்குத் தாங்களே சிக்கலை ஏற்படுத்தி கொள்கிறார்கள் என்று கூறிய அரசு அதிகாரி, அதனால் தான் வேலையின்மை காலத்தில் PF தொகையை முழுமையாக எடுப்பதற்கான காலவரம்பு 2 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அரசு, ஊழியர்களுக்கு எந்தவிதக் காரணமும் குறிப்பிடாமல், 'சிறப்புச் சூழ்நிலைகள்' என்ற பிரிவின் கீழ் நிதியை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வீட்டு வசதிக்கான நிதி எடுக்கத் தேவையான குறைந்தபட்ச பணிக்காலம் 5 ஆண்டுகளில் இருந்து 12 மாதங்களாகவும், கல்வி மற்றும் திருமணத்திற்கான பணிக்காலம் 7 ஆண்டுகளாவும் குறைக்கப்பட்டுள்ளது. உடல் நிலை சரியில்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே வேலை இல்லாமல் போனால் 2 மாதத்தில் பிஎஃப் பணத்தை எடுக்க முடியாது என்றும் 12 மாதங்கள் காத்திருந்து தான் எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு விதிகளை மாற்றி உள்ளதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "பா.ஜ.க அரசின் புதிய EPFO விதிகள் அதிர்ச்சியளிக்கிறது, இது உழைக்கும் மக்களுக்கு எதிரானது. ஊழியர்களின் பிஎஃப் சேமிப்பு நிதி (EPFO) குறித்த மத்திய அரசின் புதிய விதிகள் அதிர்ச்சியளிக்கின்றன; இவை உழைக்கும் மக்களுக்கு முற்றிலும் எதிரானவை. மக்கள் தங்கள் சொந்த சேமிப்பை எடுக்க வேண்டுமானால், முழு ஒரு வருடம் வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, ஓய்வு பெறும் வரை அவர்களின் நிதியில் 25% தொகையை முடக்குவது, மற்றும் ஓய்வூதியப் பணத்தை எடுப்பதைத் 3 ஆண்டுகள் தாமதப்படுத்துவது ஆகியவை கொடூரமான, நியாயமற்ற, மற்றும் அநீதியான நடவடிக்கைகள் ஆகும்.
லட்சக்கணக்கானோர் ஏற்கனவே வேலை இழப்பு மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த முடிவு மக்களின் மீது மத்திய அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், இது நடுத்தர வர்க்கத்திலிருந்து அரசு துண்டிக்கப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது.
கடினமாக உழைக்கும் மக்களின் பணத்தை அவர்களுக்கு ஆதரவளிக்காமல் பூட்டி வைப்பது மனிதாபிமானமற்ற செயல். இந்த மக்கள் விரோத மற்றும் கடுமையான விதி மாற்றங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விதிகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications