பழைய வாகனங்களை வாங்கினால் 14 நாளில் மறக்காமல் செய்திடுங்க.. கன்னியாகுமரி எஸ்பி அறிவுறுத்தல்
கன்னியாகுமரி: ஏழை மக்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பலர் இரண்டாம் தர வாகனங்களை வாங்கும் போது, பணத்தை மிச்சப்படுத்துவதாக நினைத்து சில சமயங்களில் பெரிய சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறார்கள். 2-ம் தர வாகனங்கள் வாங்கினால் 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏழை மக்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பலரும் 2-ம் தர வாகனங்களை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி வாங்கும் வாகனத்தை வாங்கியவுடன் உங்கள் பெயருக்கு RC-ஐ மாற்றாவிட்டால், முந்தைய உரிமையாளர் செய்த குற்றங்கள் அல்லது விபத்துகளுக்கு நீங்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். 2025 முதல் தமிழக அரசு இந்த விதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

அந்த வாகனம் திருடப்பட்டதாகவோ அல்லது ஏதேனும் குற்றச் செயல்களில் பயன்படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம் என்று போலீசார் எச்சரித்து வருகிறார்கள். போக்குவரத்து விதிமீறல்களுக்காக அந்த வாகனத்தின் மீது நிலுவையில் இருக்கும் அபராதத் தொகையை நீங்கள் கட்ட வேண்டியிருக்கும். வாகனம் பார்ப்பதற்குப் புதிது போல இருந்தாலும், உள்ளே மறைமுகமான பிரச்சனைகள் இருக்கும் வாய்ப்பு அதிகம். வாகனம் அதிக தூரம் ஓடியிருந்தாலும், மீட்டரை மாற்றிக் குறைவான தூரம் ஓடியது போல் காட்டுவது பொதுவான மோசடியாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் பெரிய விபத்தில் சிக்கிய வாகனத்தைப் பெயிண்ட் அடித்து மறைத்து விற்பார்கள். சேஸிஸ் அல்லது பில்லர்களில் உள்ள பாதிப்புகளைக் கண்டறிவது கடினமாக இருக்கிறது. அதேபோல் இன்ஜின், கியர் பாக்ஸ் அல்லது சஸ்பென்ஷன் போன்றவற்றில் இருக்கும் பழுதுகளைச் சிறிது தூரம் ஓட்டிப் பார்ப்பதன் மூலம் மட்டும் கண்டறிய முடியாது என்று கூறுகிறார்கள்.
இதனிடையே 2-ம் தர வாகனங்கள் வாங்கினால் 14 நாட்களுக்குள் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "ஏற்கனவே பயன்படுத்திய வாகனங்களை பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தால் சட்ட, பொருளாதார மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை ஏற்படுத்தும். சட்டப்படி வாகன உரிமை இருக்காது. ஆா்.சி. புத்தகத்தில் பழைய உரிமையாளர் பெயரே இருக்கும். சம்பந்தப்பட்ட வாகனம் திருட்டு, கடத்தல், சட்டவிரோத போதை பொருள் கடத்தல்களில் ஈடுபடுத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான அபராதங்கள் ஆர்.சி.புக் உரிமையாளர் பெயரில் வரும். இன்சூரன்ஸ் செல்லாது ஆகலாம்.
விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் மறுக்கப்பட வாய்ப்புள்ளது. வாகனத்தை வைத்து கடன் வாங்கியிருந்தால் பறிமுதல் செய்யப்பட வாய்ப்புள்ளது. பெயர் மாற்றம் செய்யாமல் வாங்கிய வாகனம் திருட்டு வாகனம் என தெரிய வந்தால் உங்களுக்கும் பிரச்சினை ஏற்படும். எனவே 2-ம் தர வாகனம் வாங்கும்போது பெயர் மாற்றம் உடனே செய்வது அவசியம். அந்த வாகனத்திற்கு ஏதேனும் போக்குவரத்து அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். இதேபோல விபத்துக்களை தடுக்க இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications