விஜய் அரசு தூங்கும் நேரத்தில்.. பல கோடியை அள்ளிய கர்நாடகா.. நாளுக்கு நாள் பின்தங்கும் தமிழ்நாடு
பெங்களூர்: தென்னிந்திய மாநிலங்களுக்கிடையே தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் கடுமையான போட்டி நிலவி வரும் சூழலில், அண்டை மாநிலமான கர்நாடகா ஒரே நாளில் ரூ.29,679.20 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் 66,360-க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மறுபுறம், விஜய் ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்தின் தொழில் முதலீட்டுச் சூழல் தொய்வடைந்து காணப்படுவதாகவும், பெருநிறுவனங்களின் புதிய முதலீடுகள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களை ஈர்ப்பதில் போதுமான வேகம் இல்லை என்றும் அரசியல் மற்றும் தொழில் துறை வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இத்தகைய சூழலில், கர்நாடகாவின் இந்த மாபெரும் நகர்வு நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உயர்நிலைக் குழு கூட்டத்தில் 17 திட்டங்களுக்கு ஒப்புதல்
கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில், பெங்களூருவில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் மாநில உயர்நிலைக் குழுவின் 68-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த தொழில் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விரிவான ஆய்வுக்குப் பின்னர், 9 புதிய தொழில் திட்டங்களுக்கும், ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் 8 விரிவாக்க அல்லது திருத்தப்பட்ட திட்டங்களுக்கும் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் 9 புதிய திட்டங்கள் மட்டுமே ரூ.25,710.56 கோடி மதிப்பிலான முதலீடுகளைக் கொண்டுவருவதோடு, சுமார் 64,349 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளன.
குவிந்த முன்னணி நிறுவனங்களின் முதலீடுகள்
இந்தப் புதிய திட்டங்களில் முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை முதலீடு செய்ய முன்வந்துள்ளன:
ஹீரோ ஃபியூச்சர் எனர்ஜிஸ் - புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ரூ.9,760 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 3,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வைப்ரான்சி ரியல் எஸ்டேட்ஸ் - பெங்களூருவில் ஐடி மற்றும் ஐடிஇஎஸ் அலுவலக வளாகங்களை அமைக்க ரூ.2,195.94 கோடி முதலீடு செய்கிறது. இது சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.
ட்ரூஆல்ட் பயோஎனர்ஜி - ரூ.2,988 கோடி முதலீட்டில் 21,436 பேருக்குப் புதிய பணிகளை வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மஹிந்திரா ஏரோஸ்ட்ரக்சர்ஸ் - கோலார் பகுதியில் விண்வெளி மற்றும் வானூர்தி உதிரிபாகங்கள் உற்பத்தி மையத்தை அமைக்க ரூ.2,300 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நிரானி சுகர்ஸ் - ரூ.4,062.60 கோடி முதலீட்டில் 700 பேருக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும்.
எப்சிலான் கேம் - ரூ.1,500 கோடி முதலீடு (500 பணிகள்).
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் - பெங்களூரு அருகே பிசினஸ் இன்டெலிஜென்ஸ் மையத்தை அமைக்க ரூ.1,200 கோடி முதலீடு செய்கிறது.
ஏக்வஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் - ரூ.1,104 கோடி முதலீட்டில் தார்வாடில் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தி மூலம் 4,813 வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.
லைட்ஹவுஸ் கேன்டன் - ரூ.600 கோடி முதலீடு (200 பணிகள்).
விரிவாக்கத் திட்டங்களில் டிவிஎஸ் மோட்டார்
ஏற்கெனவே இயங்கி வரும் நிறுவனங்களின் விரிவாக்கத்திற்காக ரூ.3,968.64 கோடி மதிப்பிலான 8 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கூடுதலாக 2,011 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இதில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார், கர்நாடகாவில் ரூ.1,050 கோடியை முதலீடு செய்வது தொழில்துறை வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றுடன் எம்எஸ்பிஎல் ரூ.884.25 கோடி, பீமா ஃபைன் கெமிக்கல்ஸ் ரூ.605.15 கோடி, சான்செரா இன்ஜினியரிங் ரூ.492.24 கோடி, ஹோண்டா கார்ஸ் இந்தியா ரூ.437 கோடி, என்சூர் ரிலையபில் பவர் சொல்யூஷன்ஸ் ரூ.250 கோடி மற்றும் ஹேவல்ஸ் இந்தியா ரூ.250 கோடி எனப் பல்வேறு நிறுவனங்கள் விரிவாக்க முதலீடுகளை மேற்கொள்கின்றன.
தொழில் திட்டங்களுக்கு விரைவாக அனுமதியளிக்கும் அதே வேளையில், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் முன், சமர்ப்பிக்கப்படும் திட்ட அறிக்கைகளை முழுமையாக ஆய்வு செய்ய நிதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒப்புதல்களுக்கு முன்பாகவே 'ப்ரீ-கிளியரன்ஸ் ஆடிட்' எனப்படும் முன்-தணிக்கையைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், இதற்கென தனி தணிக்கைக் குழுவை உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அண்டை மாநிலங்கள் மின்னல் வேகத்தில் முதலீடுகளைக் குவித்து, பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி வரும் நிலையில், தமிழக அரசும் விரைவான நடவடிக்கைகளை எடுத்து பெருந்தொழில்களைத் தக்கவைக்க வேண்டும் என்பதே தொழில் வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications
