“விசாரணை குழுவை.. தவெக தேர்வு செஞ்சுக்க முடியுமா?” - கார்த்தி சிதம்பரம் கேள்வி
சென்னை: தமிழ்நாடு அரசு, வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் உருவாக்கியிருந்த விசாரணை குழு வேண்டாம் என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் உச்சநீதிமன்றத்தில் வலியுறுத்தியிருந்தது. இது குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், "விசாரணை குழுவை.. தவெகவே தேர்வு செஞ்சுக்க முடியுமா?" என்று கேட்டிருக்கிறார்.
கரூரில் கடந்த 27ம் தேதி விஜய் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்த சென்னை உயர்நீதிமன்றம், அஸ்ரா கார்க் தலைமையில் புலனாய்வு குழுவை அமைக்க வழிக்காட்டியது. இதனையடுத்து தமிழ்நாடு அரசும் குழுவை அமைத்து.

ஆனால் இந்த குழுவின் விசாரணையில் நம்பிக்கையில்லை என்று கூறி, சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது தவெக. இது குறித்து கருத்த தெரிவித்துள்ள கார்த்தி சிதம்பரம், "விசாரணை குழுவை.. தவெகவே தேர்வு செஞ்சுக்க முடியுமா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "அதிமுக நிகழ்ச்சியில் யார் கொடி காட்டினார்கள் என்று எனக்கு தெரியாது. உண்மையாகவே எடப்பாடி பழனிசாமி பேசும்போது கொடி காட்டினார்களா? அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமா? என தெரியாது. அப்படி இருக்கும் போது இதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா?
கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்னும் எந்த தீர்ப்பையும், உத்தரவையும் வழங்கவில்லை. உத்தரவு பிறப்பிக்கப்படாத வரை, உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுதான் செல்லுபடி ஆகும். நமக்கு வேண்டிய விசாரணைக் குழுவை நம்மளே தேர்ந்தெடுத்து விட முடியுமா? தமிழக வெற்றி கழகமே தனக்கு தேவையான விசாரணை குழுவை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமா? நீதிமன்றம்தானே விசாரணை குழுவை அமைத்திருக்கிறது.
நீதிமன்றம், காவல்துறை அதிகாரி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவை நியமித்திருக்கிறது. நீதிமன்றம் நியமித்த குழுவை இவர்கள் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்? இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள். நீதிமன்றம் இது குறித்து ஏதேனும் உத்தரவு வந்தால் பார்க்கலாம்" என்று கூறியிருந்தார்.
41 உயிர்கள் பலியானதையடுத்து, ராகுல் காந்தி விஜய்யிடம் பேசியிருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். அதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், "முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையில்தான் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினார். இதில் அரசியல் எதுவும் இல்லை" என தெளிவாக கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications