“திமுகதான் விஜய்க்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும்".. இயக்குநர் கரு.பழனியப்பன் சொல்றதை பாருங்க!
சிவகங்கை: "நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் திமுக விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார்." எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கரு.பழனியப்பன்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகில் 'தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். ஓரணியில் தமிழ்நாடு' என்ற தீர்மான ஏற்பு கூட்டம் சிவகங்கை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார்.

இயக்குநர் கரு.பழனியப்பன் பேசுகையில், "சிவகங்கை மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். இன்றைக்கு வந்த நடிகர் விஜய் இந்தியை எதிர்த்துதான் அரசியல் செய்கிறார். அதைத்தான் நாங்களும் செய்கிறோம். எங்களுடன் வந்து அவர் நிற்க வேண்டியதுதானே? புது பொருள் விற்றால்தானே தனிக்கடை போட வேண்டும்.
நான் எந்த மேடையிலும் விஜய்யை விமர்சிப்பது கிடையாது. ஏனென்றால் திமுக விஜய்க்கு அடுத்த முறை ராஜ்யசபா சீட்டு கொடுக்க வேண்டும். ஏனென்றால் திமுகவிற்கு அவர் வந்து விடுவார்." எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செப்டம்பர் 20 நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார். நாகப்பட்டினத்தில் பேசிய போது ஆளும் கட்சியான திமுகவை விமர்சித்த விஜய், எனது பரப்புரைக்கு விதிக்கும் நிபந்தனைகளை பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவுக்கு விதிக்க முடியுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
திருவாரூரில் பேசியபோது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைக் குறிப்பிட்டு, "ரொம்ப நாளாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என மார்தட்டிக் கொண்டவரின் மகன், முதல்வர் ஸ்டாலின், நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்னும் தேரை கட்டைபோட்டு ஓடவிடாமல் நிறுத்தியுள்ளார்" என்று விமர்சித்தார் விஜய்.
திமுகவை தொடர்ந்து விமர்சித்து பேசி வரும் விஜய், திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி எனக் கூறி வருகிறார். திமுகவின் எதிரி மற்றும் அதிமுகவுக்கு மாற்று தவெக தான் என விஜய் நிறுவ முயற்சித்து வருகிறார். இந்நிலையில் தான் விஜய்யே திமுக பக்கம் வந்துவிடுவார் என கரு.பழனியப்பன் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications