பாசிச பாஜக! அடிமை அதிமுகவை விரட்ட! திமுக கூட்டணிக்கே எனது ஆதரவு.. முன்னாள் எம்எல்ஏ கருணாஸ் அறிவிப்பு
சென்னை: பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த அடிமை அதிமுகவை விரட்ட நாம் ஒரு குடையின் கீழ் அணியாக வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ள திருவாடாணை தொகுதி முன்னாள் எம்எல்ஏ கருணாஸ், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அது போல் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்பதை தெரிவிக்க முதல்வர் ஸ்டாலினை அவர் சந்திக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக எனும் பாசிச சனாதன சக்தியை வீழ்த்த, அடிமை அதிமுகவை விரட்ட, நாம் ஒரு குடையின் கீழ் அணியாக வேண்டியிருக்கிறது. அதற்கான களமாக இந்த மக்களவை தேர்தலை பயன்படுத்தி நாட்டை காக்கவேண்டும்.
மதவெறி சக்திகளை அடியோடு வீழ்த்தி, இந்தியாவில் மதநல்லிணக்கம் மாண்புற, மக்கள் ஜனநாயகத்தை மீட்க, சமூக நீதியை காக்க 'இண்டியா' கூட்டணியை 2024 மக்களவை தேர்தல் களத்தில் வெற்றிபெறச் செய்யவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் திமுகவை முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரிக்கிறது.
இனி மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இந்திய பெருமுதலாளிகளின் கையில், கார்ப்ரேட்டின் கொள்ளைக் கூடாரமாகிவிடும். கடந்த 10 ஆண்டுகாலமாக மத்தியில் ஆட்சி செய்த பாஜக அரசின் மக்கள் விரோத ஆட்சியை அகற்றிட, தமிழகத்தில் அடிமை துரோகக் கட்சியான அதிமுகவை இந்த மக்களவை தேர்தலில் தோற்கடித்திட நமக்கு கிடைத்த சரியான வாய்ப்பாகும்.
திமுகவுக்கு பல்வேறு தோழமைக் கட்சிகள் தமது ஆதரவை தெரிவிக்கும் அதே வேளையில் பலம் வாய்ந்த இக்கூட்டணியை 40 இடங்களிலும் வெற்றிப்பெற செய்ய திமுகவுக்கு எங்களது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.
மக்கள் விரோத சனாதன சக்திகளை விரட்ட, அடிமை துரோக அதிமுகவை வீழ்த்த திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தனது பிரச்சாரத்தை மேற்கொள்ளும்." என்று தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்க தேவர் பெயர் சூட்ட வேண்டும், தேவர் ஜெயந்தியை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளையும் கருணாஸ் வைத்துள்ளார். சினிமாவில் காமெடியனாக நிறைய படங்களிலும் பின்னர் ஹீரோவாகவும் சில படங்களிலும் நடித்த நடிகர் கருணாஸ், முக்குலத்தோர் புலிப் படை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார்.
இதையடுத்து கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட கருணாஸ் வெற்றி பெற்றார். பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் சசிகலா அணியின் பக்கம் இருந்தார். சசிகலா தரப்பு எம்எல்ஏக்களை கூவத்தூரில் பாதுகாப்பாக வைத்திருக்கும் பொறுப்பிலும் கருணாஸ் முக்கிய பங்காற்றியிருந்தார். இதை அவரே சில பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு திமுக கூட்டணி பக்கம் வந்தார். எனினும் அவரது கட்சி 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த நிலையில் வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்து கருணாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications