5 முறை முதல்வர்.. இந்திய அரசியலுக்கே முன்னோடி.. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம் இன்று!
சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன.
1924ல் ஜூன் 3 அன்று திருக்குவளையில் பிறந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி இந்திய அரசியலில் காணாத உயரங்களும்.. செய்யாத சாதனைகளும் இல்லை. 5 முறை தமிழ்நாடு முதல்வராக இருந்த கருணாநிதி பெண்களுக்கு சொத்துரிமை தொடங்கி பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு இடஒதுக்கீடு வரை பல நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறார்.
இலக்கியம், அரசியல், கதை, வசனம், எழுத்து, பத்திரிக்கை துறை என்று பல துறைகளில் தனது பால்ய வயதில் இருந்தே சிறந்து விளங்கியவர் மு. கருணாநிதி.

போராட்டம்
கல்லக்குடி டால்மியா நிறுவனத்திற்கு எதிரான போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், எமர்ஜென்சிக்கு எதிரான போராட்டம் என்று கருணாநிதி தனது அரசியல் வாழ்க்கையில் செய்யாத போராட்டங்களே இல்லை. அண்ணாவின் மறைவிற்கு 1969ல் கருணாநிதி தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கென தனி அமைச்சரவை, பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு, விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, இடஒதுக்கீட்டை 69% ஆக உயர்த்தியது, கை ரிக்சா ஒழிப்பு என்று பல்வேறு திட்டங்களை இவர் கொண்டு வந்து இருக்கிறார்.

பல திட்டங்கள்
அதேபோல் குடிசை மாற்று வாரியம் அமைத்தது, விவசாய பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கியது, கோவையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைத்தது, சமத்துவபுரம் கொண்டு வந்தது, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கியது பல முன்னோடி சாதனை திட்டங்களை செய்துள்ளார்.
மேலும் மகளிர் சுயஉதவிக் குழு அமைத்தது. 1 கிலோ அரிசி 2 ரூபாய், விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் 7000 கோடி ரூபாய் தள்ளுபடி, திருமண நிதியுதவி வழங்கியது உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

நினைவு தினம்
2018 ஆகஸ்ட் 7ம் தேதி காவிரி மருத்துவமனையில் காலமான இவரின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மாணவர்களுக்கு உணவு, யூனிபார்ம், நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட உள்ளனர். திருவாரூரில் கருணாநிதி இல்லம் மலர்களால் இதய வடிவில் அலங்கரிப்பு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video

அஞ்சலி
தமிழ்நாடு முழுக்க அவரின் சிலைக்கும், உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட உள்ளது. சென்னையில் மெரினாவில் உள்ள கருணாநிதியின் சமாதியும் அலங்கரிப்பு செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் இன்று கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு கருணாநிதி சமாதி நோக்கி திமுக இன்று அமைதி பேரணி நடத்துகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications