அந்த கட்டிடத்துக்கும் கலைஞர் கருணாநிதி பெயர் தான்.. நேரு வைத்த கோரிக்கை.. உறுதியாகச் சொன்ன ஸ்டாலின்!
சென்னை: சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்படும் கட்டிடத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு கட்டிடங்களுக்கு கலைஞர் பெயர் சூட்டுவதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பின், தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்களுக்கும், பல்வேறு கட்டுமானங்களும், பேருந்து நிலையங்களுக்கும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து முனையம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் இப்படி, கருணாநிதி பெயரால் அமைக்கப்பட்டுள்ள திட்டங்கள், கட்டுமானங்கள் ஏராளம்.

அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயர்: மேலும், கருணாநிதி உருவச் சிலைகளும் தமிழ்நாடு முழுக்க அமைக்கப்பட்டு வருகின்றன. அரசு திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டப்படுவதை அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எங்கு பார்த்தாலும் முதல்வர் ஸ்டாலின் தனது அப்பா பெயரை வைக்கிறார் என எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து கருணாநிதி பெயரில் பெயர் வைக்கும் விழாவை மட்டுமே நடத்தி வருகிறார் என்றும் மக்களை பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை என்றும் விட்டால் தமிழ்நாட்டுக்கு கருணாநிதி என்று பெயர் கூட வைத்து விடுவார் என்று கூட அதிமுக மாஜிக்கள் பேசி வருகின்றனர். எனினும், திமுக அரசு இந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், திட்டங்களுக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டுவதை தொடர்ந்து வருகிறது.
உறுதியாகச் சொன்ன ஸ்டாலின்: இந்நிலையில் இன்று, சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவின்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை அருகே தமிழக அரசால் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயரை சூட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பேசி முடிப்பதற்கு முன்பு, “இங்கே நம்முடைய அமைச்சர் ஒரு கோரிக்கையை வைத்தார். சென்னை மாநகராட்சியின் கட்டடத்திற்கு அருகில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு புதிய கட்டிடத்திற்கு தலைவர் கலைஞர் அவர்களுடைய பெயரை சூட்டவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கலைஞருடைய நூற்றாண்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, நிச்சயமாக அந்த கட்டடத்திற்கு “கலைஞர் நூற்றாண்டு விழா கட்டடம்” என்று பெயர் சூட்டப்படும்” எனத் தெரிவித்தார்.
சென்னை மாநகர மக்களின் குடிநீர்த் தேவையை நிரந்தரமாக தீர்ப்போம்.. அடித்துச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
நேரு என்றாலே பிரம்மாண்டம்: மேலும் அமைச்சர் நேரு பற்றி பேசிய முதல்வர் ஸ்டாலின், “அமைச்சர் நேருவை பொறுத்தவரைக்கும், எதையுமே பிரமாண்டமாகத்தான் செய்வார். கட்சி சார்பாக நடத்தும் மாநாடாக இருந்தாலும், அதை நாங்கள் நேரு அவர்களிடம்தான் ஒப்படைப்போம்; ஆட்சியில், நகராட்சி நிர்வாகம் போன்ற பிரமாண்டமான துறையையும் நேரு அவர்களிடம்தான் ஒப்படைத்திருக்கிறோம்.
நகராட்சி நிர்வாகத்தை கவனிக்க துடிப்பாக செயல்படுகின்ற அமைச்சர் வேண்டும் என்று தேர்ந்தெடுத்து அமைச்சர் நேரு அவர்களிடம் நான் அதை ஒப்படைத்தேன். அமைச்சர் கே.என்.நேரு, அவர் போலவே, அவர்கூட இருக்கின்ற அதிகாரிகளையும் முடுக்கிவிட்டு, தமிழ்நாட்டினுடைய உள்கட்டமைப்பு பிரம்மிப்பூட்டுகின்ற வகையில் மாற்றிக்கொண்டு இருக்கிறார்.” எனப் பேசினார் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications