எம்ஜிஆர்-சிவாஜியை உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர்! சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி
சென்னை: சென்னை கிண்டியில் நடந்த கலைஞர் 100 விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் 'கலைஞர் 100' நிகழ்வு தொடங்கியது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் பங்கேற்றுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அதே போல நடிகர் கமல்ஹாசன், நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகைகள், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று பேசினார். நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-
மேடையின் ஓரமாக நின்று பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரம் தான். கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவினை வசனம் வசப்படுத்தியவர் என்றால் அது கலைஞர் தான்.
எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர். ஒருவர் கருணாநிதி, ஒருவர் சிவாஜி, ஒருவர் எம்ஜிஆர். சிறுவயதில் நான் கலைஞரை போல ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்று என் அக்காவிடம் கூறுவேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று கருணாநிதியிடம் கற்றுக்கொண்டதால் தான் இன்று பிக்பாஸ் மூலம் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.
விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த அரசியல் மாண்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்பு எங்கிருந்து கற்றுகொண்டது என்று எனக்கு தெரியும். கலைஞர் கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.


Click it and Unblock the Notifications
