பழங்களில் செதுக்கப்பட்ட கருணாநிதி, ஸ்டாலின் முகம்.. பச்சை வள்ளுவர் -சென்னை மலர் கண்காட்சி சிறப்புகள்
சென்னை: நேற்று தொடங்கப்பட்ட சென்னை மலர் கண்காட்சியில் பழங்கலால் செதுக்கப்பட்ட பேறிஞர் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் முக சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூன் 3 ஆம் தேதியான நேற்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

சென்னையில் முதல்முறையாக மலர் கண்காட்சி
இதன் தொடர்ச்சியாக சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் பிரமாண்ட மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது. நேற்று தொடங்கிய இந்த மலர் கண்காட்சி ஜூன் 5 ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும். சென்னை வரலாற்றிலேயே நடைபெறும் முதல் மலர் கண்காட்சி இது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் பார்வையிடலாம்
ஊட்டி மலர் கண்காட்சிக்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது. இரவு 8 மணி வரை பொதுமக்கள் மலர் கண்காட்சியை பார்வையிடலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், மாணவர்களுக்கு ரூ.20-ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன.

மக்கள் ஆர்வம்
ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தளங்களில் மட்டுமே சீசன் சமயங்கள் நடத்தப்பட்டு வந்த மலர் கண்காட்சி இம்முறை சென்னையில் நடைபெற்றது சென்னை வாசிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா சென்று மலர் கண்காட்சியை காண முடியாதவர்கள் கலைவானர் அரங்கிற்கு படையெடுக்க தொடங்கி இருக்கின்றனர். நேற்று ஏராளமான மக்கள் இங்கு வருகை தந்த நிலையில், இன்று காலையிலேயே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது.

சிறப்பம்சங்கள்
இந்த கண்காட்சியில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை, புனே, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. கண்காட்சிக்கு வரும் மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக செல்பி ஸ்பாட்டும் அமைக்கப்பட்டு உள்ளது.

கருணாநிதி, அண்ணா, ஸ்டாலின் சிற்பங்கள்
அதேபோல் வள்ளல் பாரி, ஔவையார், திருவள்ளுவர் போன்றவர்களின் மலர் சிற்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. பழங்களால் செதுக்கப்பட்ட கவிஞர் பாரதியார், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முகங்கள் சிற்பங்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகத்தை போல் செதுக்கப்பட்ட பழமும் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications