"வருத்தமா இருக்கு".. திடீரென கமலை சந்தித்த கருணாஸ்.. நாம் தமிழர் - மநீம கூட்டணிக்கு அஸ்திவாரம்?
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுடன் இன்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்திப்பு நடத்தினார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்றாலும் கொங்கு மாவட்டங்களில் நல்ல வாக்குகளை பெற்று இருந்தது. முக்கியமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் "டஃப் பைட்" கொடுத்து இருந்தார்.
ஆனால் தேர்தலுக்கு பின்பாக டாக்டர் மகேந்திரன் உட்பட மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பலர் வரிசையாக கட்சியில் இருந்து வெளியேறினார்கள்.

வெளியேற்றம்
மூத்த நிர்வாகிகள் பலர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பெரிய அளவில் வெளியே செல்லாமல் இருந்தார், அதோடு அரசியல் தொடர்பான ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் கமல்ஹாசன் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில்தான் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் மநீம கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் சந்திப்பு நடத்தினார்.

சாம்கோ
ஆழ்வார்ப்பேட்டை சாம்கோ ஹோட்டலில் கமல்ஹாசனுடன் கருணாஸ் சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்தார். இவர்கள் கிட்டத்தட்ட 30 நிமிடம் ஆலோசனை செய்தனர். நடந்து முடிந்த தேர்தல் குறித்து இவர்கள் ஆலோசனை செய்துள்ளனர். அதோடு இனி அரசியல் திட்டங்கள் என்ன, சினிமாவில் என்ன செய்வது என்பது குறித்தும் கருணாஸ், கமல்ஹாசன் ஆலோசனை செய்தனர்.

ஒதுங்கி இருக்கிறார்
சட்டசபை தேர்தல் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே கருணாஸ் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது அதிமுக, திமுக இரண்டிற்கும் அவர் நெருக்கமாக இல்லை. சசிகலாவும் அரசியலில் கம்பேக் கொடுக்காத நிலையில் கமல்ஹாசனை சந்தித்துள்ளார்.

கூட்டணி
எதிர்கால கூட்டணிக்கு வித்திடும் வகையில் இவர்கள் ஆலோசனை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சி குறித்தும் இவர்கள் ஆலோசனையில் பேசி உள்ளனர். புதிய, வலுவான கூட்டணி அமைப்பதை பற்றியும், நாம் தமிழர் - மக்கள் நீதி மய்யம் கூட்டணி கூட்டணி குறித்தும் கூட இவர்கள் ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

அரசியல்
அரசியல் தாண்டி கமல்ஹாசனின் அடுத்தகட்ட சினிமா திட்டங்கள் குறித்தும் பேசி உள்ளனர். கமலின் அடுத்த புரோஜெக்ட், இந்தியன் 2 படப்பிடிப்பு ஆகியவை குறித்தும் இவர்கள் ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார்கள். மொத்தமாக இந்த ஆலோசனை 30 நிமிடம் நடந்து இருக்கிறது.

செய்தியாளர் சந்திப்பு
இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், கமல்ஹாசன் வீட்டில் வளர்ந்தவன் என்ற முறையில் அவரால் வளர்க்கப்பட்ட மாணவன் என்ற முறையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் மக்கள் நீதி மையம் 10 லட்சம் வாக்குகள் பெற்றது.

மக்கள் நீதி மய்யம்
வரும் காலங்களில் லஞ்ச லாபமற்ற ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மக்கள் நீதி மையம் நாம் தமிழர் கட்சியும் சேர்த்து இந்த தேர்தலில் 40 லட்சம் வாக்குகள் பெற்றது. இது வருங்காலத்தில் ஒரு கோடியை தாண்டும் எனவும் அவருடைய செயல்பாட்டிற்காக மக்களை சந்தித்து வரும் காலங்களில் நாட்டின் மக்களின் பிரச்சினைகளை போராடுகின்ற ஒரு பேரியக்கமாக மக்கள் நீதி மய்யம் உருவெடுக்க வேண்டும்.

மாற்றம்
தமிழர்களுடைய நலன் காக்கப்பட வேண்டியது என்று சீமானும் கமல்ஹாசனும் உறுதிபட இருப்பதால், இவர்கள் இணைந்து பயணித்தால் எதிர்காலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். நான் சொன்ன கருத்துகளை உன்னிப்பாக கவனித்த கமல்ஹாசன், நாளை அல்லது நாளை மறுநாள் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதாக என்னிடம் கூறினார். மக்கள் நீதி மய்யம் தேர்தலில் தோல்வி அடைந்தது வருத்தமாக இருக்கிறது. பல்வேறு விஷயங்கள் குறித்து இதில் நாங்கள் ஆலோசனை செய்தோம் என்று கருணாஸ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications