கரூரில் நடந்தது என்ன?.. களமிறங்கிய பாஜக டீம்.. ஆய்வு செய்த ஹேமமாலினி குழு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் தொடங்கி தேசியளவில் பல தலைவர்களும், மக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்கி ஆதரவு கரமும் நீட்டி வருகிறார்கள். இந்நிலையில் கரூர் சம்பவத்தை ஆராய பாஜக சார்பில் எம்பி ஹேமமாலினி தலைமையில் 8 நபர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு இன்று கரூரில் ஆய்வு செய்தனர்.
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் என்று பலதரப்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியமாக இந்தியாவில் ஒரு அரசியல் கூட்டத்தில் இவ்வளவு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது இதுவே முதல்முறையாகும். அந்த மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரணம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். தவெகவை தவிர திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜகவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஏற்கனவே கரூர் சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தவெக சார்பில் சிபிஐ விசாரணை கோரி வருகிறார்கள்.
மறுபக்கம் பாஜக கட்சி சார்பிலும் ஒரு குழு அமைத்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் நட்டா வெளியிட்ட அறிவிப்பில், பாஜக எம்பி ஹேமமாலினி தலைமையில் அணுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஶ்ரீகாந்த் ஷிண்டே, அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, கூட்ட நெரிசலுக்காக காரணத்தை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய நட்டா உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் கோவைக்கு விமானம் மூலம் வந்தனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் சாலை மார்க்கமாக கரூர் சென்றனர்.
கரூரில் ஆய்வு செய்த பாஜக குழு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தனர். பாஜக எம்பிக்கள் குழுவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் மற்றும் பலியானோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தனர்.












Click it and Unblock the Notifications