கரூர் விவகாரம்.. பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களுடன் வீடியோ காலில் பேசிய விஜய்.. அருண்ராஜ் பேட்டி!
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களுடன் வீடியோ காலில் தவெக தலைவர் விஜய் பேசியுள்ளதாக அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான அருண்ராஜ் தெரிவித்துள்ளார். விஜய் கரூர் செல்ல அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்திற்கு இ மெயில் மூலமாக கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர், இன்று நேரில் சென்று அனுமதி கேட்க உள்ளதாவும் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 27ஆம் தேதியன்று நடந்த இந்த சம்பவத்திற்கு பின், தவெகவின் தலைவர்கள் அத்தனை பேரும் தலைமறைவாகினர். தவெக தலைவர் விஜய் வீட்டில் இருந்து இதுவரை வெளியில் வரவில்லை. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர்.

அதேபோல் ராஜ் மோகன் மற்றும் நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமார் ஆகியோரும் தலைமறைவாக உள்ளனர். இதனால் தமிழக வெற்றிக் கழகத்தை தலைமறைவு வெற்றிக் கழகம் என்று பலரும் கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். அதேபோல் சென்னை உயர்நீதிமன்றமும், தவெகவை சரமாரியாக சாடி இருக்கிறது. தவெக என்ன மாதிரியான கட்சி? விஜய்க்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் விமர்சித்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் தவெக தலைவர் விஜய் பயன்படுத்தி வரும் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பியது. இதனால் விஜய்யின் பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை விஜய்யின் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
அதேபோல் கரூர் விவகாரத்தில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனை கோர்த்துவிட்டு புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரியது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் கரூர் விவகாரம் நடந்து சுமார் 2 வாரங்களாகிவிட்ட சூழலில், விஜய் இதுவரை நேரில் சென்று நலம் விசாரிக்கவில்லை என்று விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட 33 குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுதொடர்பாக தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 33 பேரின் குடும்பங்களுடன் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.
அடுத்தக் கட்டமாக கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு இ மெயில் மூலமாக கடிதம் அனுப்பி உள்ளோம். இன்று டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் சென்று அனுமதி கோர இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் விஜய்யின் கரூர் விசிட் மீதான எதிர்பார்ப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications