அதிமுக தான் டார்கெட்.. எடப்பாடியை விடாமல் அடிக்கும் விஜய்! ஏன் திமுகவை தொடவில்லை! அங்க தான் ட்விஸ்ட்
சென்னை: தமிழக அரசியலில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழகத்தின் 'ஆள் தூக்கும்' அரசியல் தான். குறிப்பாக அதிமுகவில் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தவெகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இது விஜய்யின் திட்டமிட்ட ப்ளான் எனவும், வரும் காலத்தில் தவெக Vs திமுக என்று தான் இருக்க வேண்டுன், அதற்காக தான் அதிமுக 'ஜாம்பவான்களை' தட்டித் தூக்குகிறது தமிழக வெற்றிக் கழகம் என்கின்றனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை தவெகவுக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பல்வேறு கட்சிகள் விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்தன. இதனால் அமைச்சரவையிலும் சில கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.
விஜய்
ஆனால் தவெகவின் 'ஆள் தூக்கும்' அரசியல் அதோடு நின்றுவிடவில்லை. அதிமுகவைச் சேர்ந்த பல எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் புயலையே உருவாக்கியுள்ளது. இன்னும் சிலர் இணைவார்கள் என்ற தகவல்களும் அதிமுக தலையை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஏற்கனவே மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர்.
அதிமுக
இந்த நிலையில் தற்போது எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் மேலும் பலர் இணையலாம் எனவும் சொல்லப்படுகிறது. எதற்காக பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளை விட்டுவிட்டு அதிமுகவை மட்டும் தமிழக வெற்றிக்கழகம் குறி வைக்கிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. உண்மையில் விஜயின் திட்டமிட்ட நகர்வு என்கின்றனர் தவெகவினர்.
திமுக
அரசியல் செய்ய வேண்டும் என்றால் எதிர்க்கட்சி தேவை. அந்த எதிர்க் கட்சி அது திமுகவாகத்தான் இருக்க வேண்டும் அதிமுகவாக இருக்கக் கூடாது என்பது விஜய் கணக்கு என்கின்றனர். இந்த ஐந்து ஆண்டுக்கான கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு விஜய் செயல்படவில்லை எனவும், அதற்குப் பிறகும் தமிழக வெற்றிக்கழகத்தை ஒரு மிகப்பெரிய அரசியல் கட்சியாக உருவாக்கும் முயற்சிதான் அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளை தட்டி தூக்குவது என்கின்றனர்.
தமிழக வெற்றி கழகம்
விஜயின் தனிப்பட்ட செல்வாக்கு மட்டுமே தற்போது தமிழக வெற்றி கழகத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால், இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்ட அளவில் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் அவசியம் என விஜய் உணர்ந்துள்ளார். இதனால்தான் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மாவட்ட அளவில் செல்வாக்கு கொண்ட தலைவர்களை இழுத்து வருவதாக சொல்கின்றனர்.
தவெக - அதிமுக - திமுக
மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்ட பிறகு திமுக அதிமுக என்ற இரு துருவ அரசியல் மட்டுமே தற்போது வரை இருக்கிறது. இந்த நிலையில் தற்போது தவெக - அதிமுக - திமுக மும்முனை போட்டி இருக்கும் நிலையில், அதிமுக திமுக என இரு துருவ அரசியலாக வேண்டும் என்பதுதான் விஜயின் திட்டம் எனவும் அதற்காகவே தற்போது இந்த வியூகத்தை அவர் செயல்படுத்தி வருகிறார் என்கின்றனர்.
தேர்தல் தோல்வி
விஜயின் இந்த வியூகத்தால் அதிக பாதிப்பை சந்தித்து இருப்பது அதிமுக தான். தேர்தல் தோல்வி, தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியில் அதிருப்தி, மூத்த தலைவர்கள் வெளியேறுவது, மேலும் கட்சியில் இருக்கும் தலைவர்களும் போர்க்கொடி தூக்குவது என அதிமுகவின் அடிமட்டத்தையே அசைத்து பார்த்துள்ளது தற்போதைய அரசியல் நிகழ்வுகள். அதே நேரத்தில் அதிமுக முழுமையாக பலவீனமடைந்து விட்டது என சொல்ல முடியாது.
இரட்டை இலை
இரட்டை இலை எனும் மாபெரும் ஆயுதம் அந்த கட்சிக்கு இருக்கிறது. தலைமை மீது தான் தொண்டர்களுக்கு அதிருப்தி இருக்கிறது. தவிர அதிமுகவின் கொள்கைகள் இரட்டை இலை சின்னத்துக்கு என தனி வாக்கு வங்கி உள்ளது. எனவே கட்சியிலிருந்து வெளியேறும் தலைவர்களை சமாதானம் செய்து கட்சிக்குள் வரவழைக்க வேண்டும், தொண்டர்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது .ஒரு வேலை அப்படி நடந்து விட்டால் மீண்டும் அதிமுக தனது பழைய பலத்தை பெற்று விடும் என்கின்றனர். அதிமுக பலம் பெறுமா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் வியூகம் தான் வெல்லுமா? என்பதுதான் தமிழக அரசியலின் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications