மூச்சு விட முடியலை.. விலா எலும்பு உடைஞ்சு.. நுரையீரல் கிழிஞ்சு! உறைய வைத்த உடற்கூறு ஆய்வு முடிவுகள்!
சென்னை: 41 உயிர்களைப் பலி கொண்ட கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில், கடைசி 2,3 நிமிடங்கள் மூச்சு விட முடியாத நிலையில் மூச்சுத்திணறலால் 25 பேர் உயிரிழந்துள்ளனர், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு விலா எலும்புகள் உடைந்து உள்ளுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 2 நிமிடத்திற்கு மேல் மூச்சு விட முடியாத நிலையால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன் தினம் (செப்டம்பர் 27) கரூர் வேலுச்சாமிபுரத்தில் 3வது வார பிரச்சார கூட்டத்தை நடத்தினார். இந்த பிரச்சார கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

விஜயின் உரையை கேட்க பெரும் கூட்டம் திரண்ட நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலர் மயங்கி கீழே விழுந்தனர். 10 குழந்தைகள், 20 பெண்கள் உட்பட மொத்தம் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் நெரிசல்
இதில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 28 பேர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தலா 2 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர். கூட்ட நெரிசலில் காயமடைந்த 52 பேர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும் தனியார் மருத்துவமனைகளில் 61 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
41 உயிரிழப்பு
இந்நிலையில், தமிழ்நாட்டையே உலுக்கிய கரூர் பேரதிர்ச்சியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த பெரும்பாலானோர் கடைசி சில நிமிடங்களில் மூச்சு விட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, நெரிசலில் சிக்கிய பலருக்கும் கடைசி 2 முதல் 3 நிமிடங்கள் வரை மூச்சு விட முடியாத நிலையில் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் விளைவாக குறைந்தது 25 பேர் நேரடி மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளனர்.
மூச்சுத்திணறல் மரணம்
மேலும், 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்பட்ட நெரிசலால் விலா எலும்புகள் முறிந்து உள்ளுறுப்புகள் சேதமடைந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே அவர்களின் உடல் செயல்பாடுகளை பாதித்து, உயிரிழப்புக்குக் காரணமாகியுள்ளது. மருத்துவர்களின் தகவல்படி, நெரிசலால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் மிகவும் கடுமையாக இருந்தது. 2 நிமிடங்களுக்கு மேல் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டதால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன" என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மூச்சுத்திணறலால் உயிரிழந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் உயிரிழப்பு
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த பத்து குழந்தைகளின் நுரையீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் மிகக் கடுமையாக சேதம் அடைந்திருக்கின்றன. விலா எலும்புகள், கழுத்து எலும்புகள் உடைபட்டு இருக்கின்றன. கழுத்து, இடுப்பு, முதுகு பகுதியில் எலும்பு முறிவுகளும் தசைகளும் சேதம் அடைந்திருக்கின்றன. அதிக கூட்டத்தில் சிக்கிக்கொண்ட குழந்தைகளும் கழுத்து எலும்பும் கூட உடைபட்டு இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications