பெரிய தொகை நன்கொடை + அனைவருக்கும் வாகனம்.. வேல்முருகனிடம் பேரம் பேசிய விஜய் மேலாளர்.. என்ன நடந்தது?
சென்னை: " 'கத்தி' திரைப்படத்தை தடுத்து நிறுத்தியபோது தற்போதைய முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள விஜய்யின் மேலாளரை பெரிய தொகையை நன்கொடை தருவதாக கூறினார். கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாகனம் வாங்கி தருவதாக பேரம் பேசினார்'' என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவராக வேல்முருகன் உள்ளார். தற்போதைய பண்ருட்டி சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேறினார்.

அதன்பிறகு பிற சிறு அமைப்புகள், கட்சிகளை சேர்த்து தமிழகத்தில் 100க்கும் அதிகமான தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார். இந்த தேர்தலில் வேல்முருகன் போட்டியிடவில்லை.
இந்நிலையில் தான் சென்னையில் இன்று எடிசன் விருது வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பல கோடி பேரம்
''கங்கைகொண்டானில் (திருநெல்வேலி) தாமிரபரணி ஆறு ஓடுகிறது. தமிழ்நாட்டிலேயே தொடங்கி தமிழ்நாட்டிலேயே இந்த ஆறு முடிவடைகிறது. இந்த ஆற்றில் தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்தார்கள். அதனை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினோம். போராட்டத்துக்கு போக கூடாது என்று ஜெயலலிதா கூறினார்.
அதனை மீறி சென்றதால் தடியடி நடத்தப்பட்டது. எனக்கு அன்று விழுந்த அடியால் தான் நீண்டநேரம் என்னால் அமர முடியாது. காவல்துறை தடியடியால் எனது முதுகெலும்பு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போட்டு அதற்கு தடை வாங்கிவிட்டோம். தண்ணீரை எடுத்தது பன்னாட்டு நிறுவனம். அந்த நிறுவனம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் மூலமாக என்னிடம் பல கோடிகள் பேசினார்கள்.
விஜய்யின் மேலாளர் பேரம்
அதேபோல் 'கத்தி' திரைப்படத்தை தடுத்து நிறுத்தினேன். அந்த திரைப்படம் 'லைகா' நிறுவனத்தின் தயாரிப்பாகும். இனப்படுகொலையாளன், அவரது பங்குதாரர் என்பதால் அந்த படத்தை தடுத்து நிறுத்தினேன். இன்று முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள விஜய், அவரது மேலாளர் 'காஸ்மோ பாலிட்டன்' கிளப்பிற்கு வந்து பெரிய தொகையை கூறி நன்கொடை தருவதாக கூறினார்.
உங்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாகனம் வாங்கி தருவதாக கூறினார்கள். இதுவரை யாரிடத்திலும் ஒரு ரூபாய் கூட லஞ்சமோ, கமிஷனோ, கையூட்டோ வாங்காத ஒரு அரசியல்வாதியாக தகுதி படைத்தவனாக இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். 'கத்தி' படம் ரிலீசாக வேல்முருகனிடம், விஜய்யின் மேலாளர் பேரம் பேசிய விவகாரம் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications