நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: சென்னைக்கு வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்
சென்னை: தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்நிலையில், சென்னையில் நாளை நடைபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு ஆலோசனைக் கூட்டம் நாளை (மார்ச் 22) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கேரளா, தெலங்கானா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், இக்கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னைக்கு வருகை புரிந்துள்ளார். கேரளத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த முதல்வர் பினராயி விஜயனுக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்ட கேரள முதல்வர் பினராயி விஜயன் கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications