ஆயிரக்கணக்கான உயிர்களை காத்த ரத்த வங்கி சேவை! கேரள போலீஸின் Pol-Blood.. நாட்டிலேயே முதல் முறை அதிரடி
சென்னை: அவசர ஆபரேஷன்கள், நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை போன்ற அவசியமான நேரங்களில் ரத்தம் கிடைக்காமல் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் படும் சிரமங்களை குறைப்பதற்கு கேரள போலீசாரால் துவங்கப்பட்டதுதான் 'ஆன்லைன்' ரத்த வங்கி சேவை.. இந்த சேவையினால் தற்போது ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன்பெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.. போலீசார் உருவாக்கியிருக்கும் Pol-Blood என்றால் என்ன தெரியுமா?
கேரள காவல்துறையானது, அம்மாநில மக்களுக்கு உதவும் வகையில் Pol-Blood (போல் பிளட்) என்ற பெயரில் ஒரு ஆன்லைன் ரத்த வங்கி சேவையை கடந்த 2021 ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தியது..

அவசர காலங்களிலும், நீண்ட கால சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுவோருக்கும், தன்னார்வ ரத்த தானம் செய்ய விரும்புவோருக்கும் பாலமாக இந்த சேவை செயல்பட்டு வருகிறது.
நாட்டிலேயே முதல் முறை
அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர், இடைத்தரகர் அல்லது தனியார் ரத்த வங்கி வாயிலாக ரத்தம் பெற அதிக தொகை செலுத்த வேண்டிய நிலைமை இருந்தது.. எனவேதான், அவசர தேவை அவசர காலங்களில் ரத்தம் தேவைப்படுவோருக்கு உதவும் வகையில், இதற்காக பிரத்யேக மொபைல் போன் செயலியை கேரள போலீசார் உருவாக்கினார்கள்.
நாட்டிலேயே ஒரு காவல்துறை, இதுபோன்ற ஒரு சேவையை அதிகாரப்பூர்வமாக செல்போன் ஆப் மூலம் வழங்குவது இதுவே முதல் முறையாகும்.
Pol-Blood செய்யும் நன்மைகள்
ரத்தம் தேவைப்படுபவர்கள் தங்கள் மொபைல் போனில், போல்பிளட் (Pol-Blood) என்ற பெயரில் உள்ள செயலியை பதிவிறக்கம் செய்து, தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்யும் நபர்களின் அவசர தேவையை அறிந்து, அவர்களுக்கான ரத்த மாதிரியை நேரடியாக பெற்று தருகிறார்கள்.
அவசர அறுவை சிகிச்சைகள், நாட்பட்ட நோய்களுக்கான சிகிச்சை போன்ற அவசியமான நேரங்களில் ரத்தம் கிடைக்காமல் நோயாளிகளும், அவர்களது குடும்பத்தினரும் படும் சிரமங்களை குறைப்பதே இந்த ரத்த சேவை திட்டத்தின் முக்கியமான நோக்கமாகும்..
இந்த சேவை கொண்டுவரப்பட்ட பிறகு, ரத்தம் ஏற்பாடு செய்வதற்காக அதிக கட்டணத்தை வசூலிக்கும் புரோக்கர்கள், ஏஜெண்டுகளின் சுரண்டலை முற்றிலுமாக ஒழிக்க முடிந்துள்ளது, மேலும், தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவிக்க முடிகிறது.. - தேவைப்படுவோருக்கு சரியான நேரத்தில் ரத்தத்தை உறுதி செய்யவும் முடிகிறது..
ஆயிரக்கணக்கானோர் பலன்
அந்தவகையில், இந்த செயலியின் வாயிலாக, கடந்த 4 வருடங்களில 1,13,000 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆபரேஷன் செய்பவர்களும், டயாலிசிஸ், புற்றுநோய் நோயாளிகள் உட்பட ஏராளமானோர் பெரிதும் பயனடைந்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி, இதுவரை 60,790 பேர் இந்த செயலியில் பதிவு செய்துள்ளனராம்.. மேலும், 97,788 ரத்த யூனிட்கள் தேவைப்பட்ட நிலையில், Poll-Blood செயலி வாயிலாக 49,641 ரத்த யூனிட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமல்ல, ரத்த வங்கி இல்லாத நிலையில், தன்னார்வலர்களின் வாயிலாக ரத்த தானம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்
- கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து இந்த ஆப்பை டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும்.. அதில் Poll-Blood என்ற பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்
- ரத்த தானம் செய்ய விரும்புவோர், Donor Registration form பூர்த்தி செய்ய வேண்டும்.
- ரத்தம் தேவைப்படுபவர்கள் recipient request form படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, மருத்துவமனை விவரங்கள், ரத்த வங்கி, உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும்.
- இப்படி பதிவு செய்தால், காவல்துறை தலைமையகத்தில் உள்ள Pol-Blood கட்டுப்பாட்டு மையம் உடனடியாக அந்த விண்ணப்பதாரரை தொடர்பு கொண்டு, பதிவு செய்த ரத்த தானம் செய்வோருடன் ஒருங்கிணைத்து ரத்த வங்கிகள் மூலம் ரத்தத்தை ஏற்பாடு செய்து தரும்.












Click it and Unblock the Notifications