திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஐயூஎம்எல்! 60 ஆண்டு நட்பு முறிவு! ஸ்டாலினுக்கு மேலும் அதிர்ச்சி
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து இந்திய முஸ்லீம் லீக் கட்சி வெளியேறியது. இன்றுள்ள அரசியல் சூழலில் திமுகவுடன் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று நடந்தது. தேசிய தலைவர் காதர் மொய்தீன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் 480 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மிக தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

அதில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிய ஆயத்த பணிகளை செய்வது, இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி இல்லை, மேற்கண்ட தேர்தல்களில் யாருடன் கூட்டணி என்பதை பிறகு அறிவிப்பது, தண்டனை காலம் முடிந்தும் சிறையில் வாடும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த 22 ஆயுள் சிறைவாசிகளுக்கு விடுதலை என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: 60 ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணியில் இருந்தோம். தற்போது தவெக அமைச்சரவையில் இடம் பெற்றதால் திமுக கூட்டணியில் தொடர முடியாத நிலை இருப்பதால் வெளியேறுகிறோம் என தெரிவித்திருந்தார்.
திமுகவுடன் 60 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு கட்சியான ஐயூஎம்எல் கட்சி அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் கருணாநிதி, காதர் மொய்தீன் இடையே ஆழமான நட்பு இருந்தது. ஒவ்வொரு முறையும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் போது முதல் கட்சியாக ஐயூஎம்எல் கட்சிக்குத்தான் திமுக அழைப்பு விடுத்திருந்தது.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஐயூஎம்எல் கட்சிக்கு கடந்த தேர்தலை காட்டிலும் ஒரு தொகுதி குறைத்துக் கொடுக்க திமுக முன் வந்த போது, கூட காதர் மொய்தீன் அதை நியாயப்படுத்திதான் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினாரே ஒழிய, திமுகவை அவர் விமர்சிக்கவே இல்லை.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை விஜய் எதிர்பார்த்தார். அப்போது ஐயூஎம்எல்லிடம் ஆதரவு கேட்ட போது திமுக கூட்டணியில் இருப்பதால் தங்களால் தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என்றது.
இதையடுத்து மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததும் ஐயூஎம்எல்லும் கொடுத்தது. இதையடுத்து மண்ணடியில் உள்ள அவர்களது கட்சி அலுவலகத்தில் சென்ற விஜய், காதர் மொய்தீன் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். மேலும் அமைச்சரவையில் இடம் பெற அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனாலும் திமுக கூட்டணியில் இருந்ததால் வெறும் ஆதரவு மட்டும் தருவதாக ஐயூஎம்எல் கூறியிருந்த நிலையில் திடீரென அக்கட்சியின் எம்எல்ஏ ஷாஜஹான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தார். உடன் விசிகவின் வன்னியரசும் அமைச்சரானார்.
இதை திமுகவின் எம்பி ஆ.ராசா கண்டித்து ஒரு ஆபாச ட்வீட் போட்டு கடும் எதிர்ப்புகளுக்கு பிறகு அந்த ட்வீட்டை நீக்கினார். ஆ.ராசாவுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிவிட்டது. அமைச்சரவையில் இடம் பெற்றதன் மூலம் விசிக திமுக கூட்டணியில் இல்லை. அது போல் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. ஆனால் அவர்களின் நிலைப்பாடு இனிதான் தெரியும். தற்போது மதிமுகவும் திமுக கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications