கிளாம்பாக்கத்துக்கே போறோம்.. சென்னைக்குள் பஸ்ஸை இயக்க முடியுமா? ஆரம்பித்த ஆம்னி.. தமிழக அரசு முடிவு?
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கு மாற தயாராக உள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ள நிலையில், சில கோரிக்கைகளையும் முன்வைத்திருக்கிறார்கள்.
கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தரப்பில் மறுப்பு சொன்னார்கள்.

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை என்பால், போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், இட வசதிகளை செய்து தந்தபிறகு கிளாம்பாக்கம் செல்கிறோம் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அரசின் உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பஸ்களும் கோயம்பேடு செல்லாமல் கிளாம்பாக்கம் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.
பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இறக்கி விடுவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக பயணிகளும் புலம்பியிருந்தனர். இதனிடையே, ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்டவை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து முனைய விவகாரத்தில், ஆம்னி பேருந்து சங்கங்களுடன் இன்று ஜனவரி 3ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில், சென்னை ஹைகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பேச்சுவார்த்தை: அதன்படியே, ஆம்னி பஸ்கள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆம்னி பஸ் நிர்வாகிகள், ஆம்னி பஸ்கள் சென்னை மாநகர எல்லைக்குள் வந்து செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் பயணிகளை சென்னை மாநகர எல்லைக்குள் ஏற்றிச் செல்லவும், இறக்கி விடவும் அனுமததி கேட்டுள்ளோம். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மாற தயாராக உள்ளோம், முழுமையாக மாற காலக்கெடு வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது தொடர்பாக 2 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்கப்படும்" என்றனர்.
டிராவல்ஸ்: இதனிடையே, ஆம்னி பஸ்களை, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும், சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் சங்க உறுப்பினர்கள் சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருக்கக்கூடிய அலுவலகம் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்துகளை பராமரித்து, பராமரிப்பிற்குப் பின் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நகர் பகுதிகள் வழியாக கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லுவதற்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும், பயணிகளுக்கும் ஏற்றவாறு கோயம்பேட்டில் உள்ளது போல் தரைத்தளத்தில் 100க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் வழங்க வேண்டியும், ஆம்னி பேருந்துகளுக்கு நடைமேடை டிராவல்ஸ் நிறுவனங்கள் வாரியாக ஒதுக்காமல், பயணிகளை ஏற்றுவதற்கு ஏதுவாக அரசுப் பேருந்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நடைமேடை போல் ஊர்வாரியாக ஒதுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தின் தென் பகுதிகளில் இருந்து சென்னைக்கு ஆம்னி பேருந்துகள் வரும்போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம், சென்னை நகர் பகுதிகள் மற்றும் அலுவலகம் மற்றும் பணிமனைகளில் ஆம்னி பேருந்து பயணிகளை இறக்கி விடுவதற்கு அனுமதிக்க வேண்டும்.
சென்னை புறநகர்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், ஜனவரி 24ஆம் தேதிக்கு முன் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்கள் சென்னை நகர் பகுதிகளில் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதித்தது போல், இன்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் டிராவல்ஸ் நிறுவன அலுவலகங்களிலும் சென்னை நகர் பகுதிகளிலும் பயணிகளை ஏற்ற இறக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications