"யோகம்" தரும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு.. உடனே வந்துடுச்சு அறிவிப்பு.. ரெடியா இருங்க சென்னைவாசிகளே
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு குறித்த 2 மகிழ்ச்சி செய்திகள் வெளியாகி உள்ளன.. இது சென்னைவாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்துவருகிறது.
வண்டலூர் அருகே சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் இத்தனை நாளும் நடந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது. ஆனால், சில பணிகள் மீதமிருந்ததால், பஸ்முனையை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.

ஜரூர் வேகம்: இப்போது, கிட்டத்தட்ட 99 சதவீத பணிகளும் முடிவடைந்து, திறப்பு விழாவுக்கு பேருந்து நிலையம் தயாராகி வருவதாக தெரிகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இங்கிருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.
அதாவது, முதல்கட்டமாக திருநெல்வேலிக்கும், அடுத்து மதுரைக்கும், 3-வது கட்டமாக விழுப்புரத்துக்கும் பஸ்களை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு, படிப்படியாக பஸ் ஸ்டாண்டு முழுவதையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து இருப்பதாகவும் தெரிகிறது.
ரயில் நிலையம்: ஆனால், வண்டலூர் - கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கம் அமைந்துள்ளதால், நகரப் பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கம் வருவோர் பெரும்பாலும் சாலை வழியாகத்தான் பயணிக்க வேண்டும். இதனால், ஜிஎஸ்டி சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் கட்டப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே புறநகர் ரயில் நிலையம் அமைப்பதற்காக, தெற்கு ரயில்வேயுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய நிலையத்தை அமைக்க ரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலும் தந்துவிட்டாராம். அதுமட்டுமல்ல, இதற்கான செலவை முழுமையாக ஏற்க மாநில அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
யோகம்: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அமையப்போவதால், இதற்காகவே, ரயில்வே ஸ்டேஷனும் வரஉள்ளது, இரட்டிப்பு மகிழ்ச்சியை சென்னைக்கு தந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில்தான், கிளாம்பாக்கத்தில் நடந்துவரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தை இன்று அமைச்சர் சேகர் பாபு கூட்டியிருந்தார். இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன், கிளாம்பாக்கத்தில் பஸ்களை இயக்கும் பணியினை, படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இரட்டிப்பு மகிழ்ச்சி: கிளாம்பாக்கம் ரயில்வே பணிகள் இப்போதுதான் துவங்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறப்பு இன்னும் தள்ளிப்போகக்கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.. ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை என்றும், வரும் செப்டம்பர் 2வது வாரத்திலேயே, இந்த பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புதுத்தகவல் வெளியாகி உள்ளது.. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications