கிளாம்பாக்கம் தான் இனி ஸ்டாப்.. அரசு பேருந்துகளை போல் ஆம்னி பேருந்துகளின் கட்டணமும் குறைக்கப்படுமா?
சென்னை: நேற்று சென்னையில் இருந்து போனவர்களுக்கும் சரி, இன்று சென்னைக்கு வந்தவர்களுக்கும் சரி, கிளாம்பாக்கம் பஸ் நிலையம் அசவுகரியத்தை தந்துள்ளது. இனி கிளாம்பாக்கம் தான் பேருந்து நிலையம் என்கிற போது, அரசு பேருந்துகளை போல், ஆம்னி பேருந்துகளிலும் கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை பாரிமுனையில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம். நேற்று முன்தினம் வரை கோயம்பேடு, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் என அவரவருக்கு பக்கத்தில் உள்ள ஏரியாக்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிய மக்கள், நேற்று முதல் கிளாம்பாக்கம் போய் தான் ஏற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உண்மையில் சென்னை வாழ் மக்களை பொறுத்தவரை கிளாம்பாக்கம் போய் ஏறி செல்வதும் சரி, இறங்கி செல்வதும் சரி கடினமான ஒன்று தான்.. குழந்தைகள், பைகளை வைத்துக் கொண்டு கிளாம்பாக்கத்தில் சாலையை கடந்து சென்று, பேருந்திற்கு காத்திருந்து போக வேண்டிய இடத்திற்கு போக வேண்டும் என்றால், நிச்சயம் அலைச்சல் தான் ஏற்படும். பேருந்துகளை விட்டு இறங்கிய உடன் கார்களில் அல்லது ஆட்டோவில் போக ஆசைப்பட்டால், ஊரில் இருந்து வந்த பணத்தை அப்படியே ஆட்டோவிற்கும், காருக்கும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். சுமைகளுடன் ஆபத்தான ஜிஎஸ்டி சாலையை கடந்து குழந்தைகளுடன் ஏறி இடம் பிடித்து வருவது எளிதானது அல்ல என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
ரயில் நிலையம் இருந்திருந்தால் அப்படியே ஏறி எளிதாக போய் இருப்பார்கள். ஆனால் அதற்கு தற்போது தான் ஏற்பாடுகள் நடந்து வருவதால் பேருந்து மட்டுமே ஒரே வழியாக உள்ளது. மொத்த சென்னை மக்களும் கட்டாயமாக கிளாம்பாக்கம் வந்து தான் இனி பேருந்துகளில் ஏற முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பேருந்துகளை போல், ஆம்னி பேருந்துகளிலும் கட்டணத்தை கணிசமாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நகருக்கு 30 கிலோமீட்டருக்கு முன்பே இறக்கிவிடப்படுவதால், அதற்கான கட்டணத்தை திரும்பித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அண்மையில் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பயணிக்க கிளாம்பாக்கம் செல்ல வேண்டியிருப்பதால் அரசு விரைவு பேருந்துகளில் பயணக் கட்டணம் குறைக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகளைப் பொருத்தவரை அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் கிமீ-க்கு ரூ.1 வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் குளிர்சாதனமில்லா வசதி கொண்ட பேருந்துகளில் படுக்கையில் பயணிக்க ரூ.1.50, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.2 என்ற வீதம் கட்டணம் வசூலிக்கிறார்கள்,. அதன்படி, 30 கிமீ தூரம் என்பதைகணக்கில் கொண்டு, பயணக் கட்டணத்தில் ரூ.30 முதல் ரூ.60 வரை பயணக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோல் ஆம்னி பேருந்துகளிலும் கட்டணக் குறைப்பு மேற்கொண்டால் மாநகர பேருந்துகளில் பயணித்து, அவர்கள் கிளாம்பாக்கம் வந்தடைய உதவும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications