திமுகவுக்கு கல்தா.. பெரிய முடிவை எடுக்கப் போகும் வைகோ! பலிக்கப் போகும் விஜய் கணக்கு! பரபர பாலிடிக்ஸ்
சென்னை: மதிமுகவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? என்ற கேள்வி தமிழக அரசியல் களத்தில் தீவிரமாக பேசப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் குழுக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால் அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மதிமுக - திமுக கூட்டணி உடைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது என்கின்றனர் மதிமுகவினர்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணிகள் வேகமாக மாறி வருகின்றன. குறிப்பாக தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பல கட்சிகள் தங்களது முடிவுகளை மறுபரிசீலனை செய்து வருகின்றன. அந்த வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் என்ன என்பது தான் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக மதிமுக தலைமையில் பேச்சுகளும், நடவடிக்கைகளும் புதிய அரசியல் கணக்குகளை உருவாக்கியுள்ளன. குறிப்பாக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோரது கருத்துகள் பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளன.
மதிமுக
மதிமுகவின் நிலைப்பாடு குறித்து கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளை கேட்ட பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று இருவரும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். இதன் மூலம் கூட்டணி தொடர்பான விவாதம் கட்சிக்குள் தீவிரமாக நடைபெற்று வருவதை அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், கூட்டணி தொடர்பான முடிவு ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்கின்றனர் வைகோவுக்கு நெருக்கமானவர்கள்.
வைகோ
சமீபத்தில் வைகோ அளித்த பேட்டியிலும், உள்ளாட்சித் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும், கட்சியின் பொதுக்குழு மற்றும் நிர்வாகிகளின் கருத்துகளை கேட்ட பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு மதிமுக ஆதரவான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்யுடன் வைகோ நடத்திய சந்திப்பு, தொடர்ந்து இரு தரப்பிலும் வெளிப்பட்ட கருத்துகள், மதிமுக நிர்வாகிகளின் சமீபத்திய பேச்சுக்கள் ஆகியவை இந்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்த சூழலில்தான் மதிமுக உயர்நிலைக் குழுக் கூட்டம் ஜூன் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு அவைத்தலைவர் ஆ.அர்ஜுனராஜ் தலைமை தாங்குகிறார்.
கூட்டணி நிலைப்பாடு
கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழல், உள்ளாட்சித் தேர்தல் வியூகம், கூட்டணி நிலைப்பாடு மற்றும் கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக திமுக கூட்டணியில் தொடர்வதா, அல்லது தவெகவுடன் கூட்டணியை அமைப்பதா என்ற கேள்விகளுக்கு இந்தக் கூட்டம் பதிலை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல்
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றத் தொடங்கியுள்ள நிலையில், மதிமுக எடுக்கும் முடிவு அரசியல் ரீதியாக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கூட்டம் முடிந்த பிறகு வெளியாகும் தீர்மானங்கள் தமிழக அரசியலில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications