"அப்பாடா".. பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு.. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
சென்னை: சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரும் பொங்கல் பண்டிகைக்குள் திறக்கப்படும் என தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் இந்த பஸ் நிலையம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்குள் திறக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இந்த கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறக்கப்படவில்லை. இதனால் கடந்த தீபாவளி பண்டிகைக்காக தென் மாவட்டங்களுக்கு கடும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் தான் மக்கள் சென்றனர்.
பஸ்ஸை வழிமறித்து கல்லூரி மாணவர்கள் ரகளை.. போலீஸிடம் மாணவிகள் போட்டுக்கொடுத்ததால் தலைதெறிக்க ஓட்டம்

கோயம்பேடு பேருந்து நிலையம்
சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு பூக்கடையில் அமைந்திருந்த பேருந்து நிலையம், பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக கோயம்பேடுக்கு மாறியது. அங்கு ரூ.103 கோடி செலவில் கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டப்பட்டு கடந்த 2002-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு நாள் ஒன்றுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை பயணிகள் வந்து செல்கிறார்கள்.சென்னை மாநகர பேருந்துகளும், வெளியூர் செல்லும், வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளும் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால் சென்னையில் மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பண்டிகை காலங்களில் பூந்தமல்லி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

தென் மாவட்ட மக்களுக்காக
இந்நிலையில், இந்த நெரிசலை சமாளிக்கும வகையில் சென்னையை அடுத்த ஊரப்பாக்கம் அருகே கிளாம்பாக்கம் என்ற பகுதியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக பிரத்யேகமாக இந்த பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் பட்சத்தில், திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் இங்கிருந்து செல்லலாம். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் கூட்ட நெரிசல் குறையும். அதேபோல, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் வாகன நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

தள்ளிக்கொண்டே போகும் திறப்பு விழா
இதனால் இந்த பேருந்து நிலையத்தை தமிழகத்தின் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இது 2018-ம் ஆண்டே திறக்கப்படும் என முதலில் கூறப்பட்டது. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடையாததால் இதன் திறப்பு விழா தள்ளிக்கொண்டே போகிறது.

பொங்கல் பண்டிகைக்குள்..
இந்நிலையில், பரனூரில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், "வரும் பொங்கல் பண்டிகைக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. மின்சார இணைப்பு போன்ற சிறிய பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. எனவே, வரும் பொங்கலுக்கு இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும்" என அமைச்சர் கூறினார்.