கிராண்ட்ஸ்லாம்களின் காதலன்.. டென்னிஸ் விளையாட்டின் கடவுள் ’ரோஜர் ஃபெடரர்’..ஓய்வை அறிவித்த ஜாம்பவான்!
சென்னை: இனி ஃபெடரரின் நளினம், பர்ஃபெக்ஷன், பேக் ஹேண்ட் ஷாட் ஆடும்போது இரு கால்களும் காற்றில் மிதந்து, கைகள் பறக்கும் அந்த அழகை தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்க முடியாது என்று ஒவ்வொரு ஃபெடரர் ரசிகனும் ஏங்கிக் கொண்டு இருப்பான்.
இன்று பல டென்னிஸ் ரசிகர்களுக்கு தூக்கம் வராது. சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற போது எப்படி கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்கள் கலங்கியதோ, அதுபோல் இன்று தேற்ற முடியாத அளவிற்கு டென்னிஸ் ரசிகர்களின் கண்களும் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கும். உலகமே பார்த்து வியந்த டென்னிஸ் விளையாட்டின் கடவுள் ஓய்வை அறிவித்துவிட்டான்.
இனி ஃபெடரரின் நளினம், பர்ஃபெக்ஷன், பேக் ஹேண்ட் ஷாட் ஆடும்போது இரு கால்களும் காற்றில் மிதந்து, கைகள் பறக்கும் அந்த அழகை தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்க முடியாது என்று ஒவ்வொரு ஃபெடரர் ரசிகனும் ஏங்கிக் கொண்டு இருப்பான். ஒவ்வொரு முறையும் ஃபெடரரின் சில ஷாட்களை மீண்டும் மீண்டும் போட்டுப் பார்த்து ஆராய்ந்த போது, மிரண்டு போயிருக்கிறேன் என்பதை விடவும் அவரின் ஆட்டத்தின் அழகில் வீழ்ந்திருக்கிறேன் என்றே கூறலாம்.

சச்சின் - ஃபெடரர்
சுவிட்சர்லாந்து என்றாலே, இந்தியர்களின் கறுப்புப் பணம் இருக்கும் சுவிஸ் வங்கி தான் நினைவுக்கு வரும். ஆனால், அவர்களுக்குள் தனது பெயரை அழுத்தமாக செலுத்தியவர் ஃபெடரர். பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களுக்கு டென்னிஸ் தெரியவில்லை என்றாலும், ஃபெடரர் குறித்து நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
கிரிக்கெட்டுக்கு எப்படி சச்சின் கடவுளோ, அதுபோல் டென்னிஸ் உலகிற்கு ஃபெடரர் தான் கடவுள். இருவரது ஆட்டமும் ஹை கிளாஸாக இருக்கும். எப்போது பார்த்தாலும் இவர்களது ஆட்டம் மெய்சிலிர்க்க வைக்கும். சச்சின் ஃபெடரரின் ரசிகர், ஃபெடரரும் சச்சின் ரசிகர். இதனால், விம்பிள்டன் தொடரில் டென்னிஸ் கடவுளின் ஆட்டத்தை காண கிரிக்கெட்டின் கடவுள் வருவார்.

2019 நினைவுகள்
டென்னிஸில் ஆஸ்திரேலிய ஓபன், பிரேஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் போன்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் இருந்தாலும் விம்பிள்டன் தொடர் தான் மிக முக்கியமான தொடராக பார்க்கப்படும். டென்னிஸின் உலகக்கோப்பை என்று விம்பிள்டனைக் சொல்லலாம். அந்த அளவிற்கு பாரம்பரியான இந்தத் தொடர், புற்கள் ஆடுகளத்தில் நடைபெறும். அப்படி கிராஸ் கோர்ட் என்றாலே ஃபெடரர்தான். அந்த மனிதனை அடிக்க ஆளே கிடையாது.
2019ம் ஆண்டு, ஒரு பக்கம் கிரிக்கெட் உலகக்கோப்பை, இன்னொரு பக்கம் விம்பிள்டன் டென்னிஸ் தொடர். ஃபெடரரும் - ஜோகோவிச்சும் மோதிய அந்த ஆட்டத்தில் நான்கு மணி நேரம் 57 நிமிட போராட்டத்திக்கு பிறகு, தோல்வி குறித்து ஃபெடரர் கூறிய வார்த்தைகள் இவை: "சாம்பியன்ஷிப் பாயிண்ட்டை வெல்லும் வாய்ப்பை இழந்துவிட்டேன். இருப்பினும், என்னால் முடிந்த அளவிற்கு எனது ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டேன்" என்று கூறுவார்.
37 வயதில் அளவிற்கு மீறிய ஆட்டத்தைதான் ஃபெடரர் அன்று வெளிப்படுத்தினார். டென்னிஸில், ஜோகோவிச்சிற்கு பிறகு அல்லது அவரை போன்ற பல GOATS வரலாம். ஆனால் ஃபெடரர் போன்று ஒரு வீரர் கிடைப்பது எல்லாம் இனி நடக்காத காரியம். டென்னிஸ் விளையாட்டில் இனி ஃபெடரர் போல் அடுத்தடுத்து ஏஸ் புள்ளிகளை பெறுவது எவ்வளவு எளிதானதல்ல. அப்படியே ஏஸ் அடித்தாலும், அது ஃபெடரர் அளவிற்கு அழகியலுடன் கவிதை போல் இருக்காது.

ஃபெடரரின் ஆரம்பம்
2009 அமெரிக்க ஓபன் தொடரில் ஃபெடரர் தனது இரண்டு கால்களுக்கு நடுவில் ஆடிய ஷாட்டைக் கண்டு ஜோகோவிச் மட்டுமில்லை உலகமே மிரண்டது. வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் ஃபெடரர் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தினார் என்று அனைவருக்கும் புரியும். ஃபெடரர் எத்தனை தொடர்களில் விளையாடினாலும், விம்பிள்டனில் ஃபெடரர் விளையாடும் ஆட்டமே தனி.
பொதுவாக, முதல் என்பது எப்போதுமே ஸ்பெஷல்தான். ஃபெடரர் ஜூனியர் அளவில் தனது முதல் பட்டத்தை விம்பிள்டனில்தான் கைப்பற்றினார். பின்னர் சீனியர் வீரராக 2001 விம்பிள்டனில்தான் அவருக்கு சிறந்த ஓபனிங் கிடைத்தது. 2001 விம்பிள்டனின் நான்காவது சுற்றில் அமெரிக்க ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸை எதிர்கொண்டார் ஃபெடரர். சர்வீஸ் செய்வதில் வல்லமை பெற்ற சாம்ப்ராஸிற்கு 'பிஸ்டல் பீட்' என்ற செல்லப்பெயர் உண்டு. அப்பேற்பட்ட ஜாம்பவானை வீழ்த்தினார் ஃபெடரர்.

36 வயதில் நம்பர் 1
இப்படி தொடங்கிய ஃபெடரரின் பயணம் ஜோகோவிச் மற்றும் ஃபெடரரின் எழுச்சி மற்றும் காயம் காரணமாக கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தது. ஆனால் 2016ம் ஆண்டுக்கு பின் ஃபெடரர் அடைந்த எழுச்சி சர்வதேச டென்னிஸ் உலகை ஒரு குலுக்கி குலுக்கியது. 36 வயதிலும் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறலாம் என்று புதிய வரலாற்றை எழுதியவர். ஒவ்வொரு முறையும் ஆட்டத்தில் தோல்வியடைய போகிறார் என்று சோகமடையும் போது, டிராப் ஷாட் அடித்து நம்பிக்கை அளிப்பார். பெரிய ஆர்ப்பாட்டம், சத்தம், ஆக்ரோஷம் ஏதும் இன்றி சிரித்துக் கொண்டே ஃபெடரர் செய்யும் சம்பவங்களை இனி அனைவரும் மிஸ் செய்ய போகிறோம்.

டென்னிஸ் கடவுள்
அண்மைக் காலமாக அதிக கிராண்ட்ஸ்லாம் கோப்பைகளை வென்றதால், நடால் தான் டென்னிஸ் உலகின் கடவுள் என்று பேசு வருகின்றனர். ஆனால் ஃபெடரர் குறித்து நாடல் பேசிய வார்த்தைகளை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம். அவை, ஃபெடரரை விட நான்தான் சிறந்த வீரர் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு டென்னிஸ் என்றால் என்னவென்றே தெரியாது என்பதை அறிந்துகொள்ளலாம்.












Click it and Unblock the Notifications