உலக தரத்திற்கு உயரும் கேஎன்கே சாலை.. சென்னையில் வரப்போகும் குட்டி நியூயார்க்.. 90% பணிகள் ஓவர்
சென்னை: சென்னை, காதர் நவாஸ் கான் சாலை (கேஎன்கே சாலை) தற்போது தீவிரமான சீரமைப்புப் பணிகளுக்கு உட்பட்டுள்ளது. மெதுவாகத் தொடங்கி, தற்போது வேகம் பிடித்துள்ள இந்தச் சாலை மேம்பாட்டுப் பணிகளில் சுமார் 90% நிறைவடைந்துள்ளது. அந்த சாலையை பெரும்பாலும் அடுத்த 1 மாதத்திற்குள் திறப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையின் இரவு நேர வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்தப் பணிகள் நடைபெறுகின்றன.

சென்னை KNK சாலை
சென்னை ஏற்கனவே 24 மணி நேர நகரமாகச் செயல்படுகிறது. பல கடைகளும், உணவகங்களும் இரவும் பகலும் திறந்திருக்கும் நிலையில், இரவு நேர வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் திட்டங்களை மாநகராட்சி வகுத்துள்ளது. இதன் மையமாக, நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள காதர் நவாஸ் கான் சாலையை ஒரு புதிய அடையாளமாக மாற்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், கேஎன்கே சாலை அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்படும். 24 மணி நேரமும் செயல்படும் கடைகள், பப்கள், பார்கள், புதிய வகை சாலையோரக் கடைகள் என பல அம்சங்கள் இங்கே கொண்டுவரப்படும். பெங்களூருவின் எம்.ஜி. சாலை, சர்ச் ஸ்ட்ரீட் மற்றும் அமெரிக்காவின் டைம்ஸ் ஸ்கொயர் போன்ற பகுதிகளைப் போலவே, கேஎன்கே சாலையும் புதுப்பொலிவு பெறும்.
இரவு முழுவதும் செயல்படும் பப்கள் மூலம் வருவாயை ஈட்டவும், புதிய கலாச்சாரத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு நவீன, நீளமான பிளாசா அமைக்கப்படவுள்ளது. இந்த பிளாசாவின் நுழைவு வாயில் வரை இருசக்கர வாகனங்கள் செல்ல வசதி செய்யப்படும். ரட்லேண்ட் கேட் 4வது தெரு, வாலஸ் கார்டன் 2வது தெரு, மற்றும் வாலஸ் கார்டன் 3வது தெரு போன்ற அருகிலுள்ள சாலைகளும் மேம்படுத்தப்படும்.
இரவு முழுவதும் செயல்படும் பப்கள்
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது, அதையடுத்து கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 'சிங்கார சென்னை 2.0' திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் புதிய சுற்றுலாப் பகுதிகளை உருவாக்குதல், ஏற்கெனவே உள்ள பகுதிகளை மேம்படுத்துதல் போன்ற பல முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, சென்னைக் கடற்கரைகளைத் தூய்மைப்படுத்தும் பணிகளும், பல புதிய அலங்கார அமைப்புகளை உருவாக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், சாலைகள் மற்றும் பொது இடங்களைத் தூய்மையாக வைத்திருக்கும் பணிகளும் தீவிரமாகச் செயல்படுகின்றன.
சிங்கார சென்னை 2.0
'சிங்கார சென்னை 2.0' திட்டத்திற்காக ₹500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த கீ கார்ட்னர்ஸ் அமைப்புடன் இணைந்து, சென்னை அருகே ₹300 கோடி செலவில் தாவரவியல் பூங்கா ஒன்று அமைக்கப்படும். மேலும், துறைமுக நகரங்கள் திட்டத்திற்கு ₹1,825 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரவாயல் - துறைமுகம் உயர்மட்ட சாலையை மீட்டெடுத்து நிறைவு செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது; இது 20 கி.மீ. தொலைவுக்கு ஈரடுக்கு உயர்மட்ட சாலையாக அமையவுள்ளது. மீஞ்சூர் முதல் வண்டலூர் வரை 62 கி.மீ. தூரத்திற்கு இருபுறங்களிலும் 'பெருவழி மேம்பாட்டுத் திட்டம்' செயல்படுத்தப்படும் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications