“கனகராஜ் ஜெயலலிதாவின் டிரைவர் எனக் கூறினால் வழக்கு தொடர்வோம்” - டென்ஷனாகி எச்சரித்த எடப்பாடி!
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அதனால் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால் நேற்று கூறியிருந்தார். இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பதிலளித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. மேலும் அங்கிருந்த முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன. இதுமட்டுமின்றி அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இதேபோல் கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே கடந்த 22-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்த தனபால் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக நேற்று சேலத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய தனபால், " என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கொடநாடு வழக்கில் உங்களை தொடர்பு படுத்தி தனபால் என்பவர் நேற்று அளித்த பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 'இது தவறான கேள்வி.. இதை டிவியில் கேட்பதே தவறு... யாரோ ரோட்டில் போகிறவர் சொல்வதை வச்சி நீங்கள் கேட்கலமா... இப்படிப்பட்ட கேள்வி கேட்பது தவறானது.
யார் வேண்டும் என்றாலும் ரோட்டில் பேசுவார்கள்... பேசுவது சரியா தவறா என்று பார்க்க வேண்டும். ஆட்சி இருக்கிற போது பல சம்பவம் நடைபெறுகிறது. அந்த சமப்வத்தை சட்ட ரீதியாக அணுகி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வேண்டும் என்றே இன்றைய ஆட்சியாளர்கள் இதை திரித்து அவர்களுக்கு சாதகமாக சூழ்ச்சி செய்வது ஒரு போதும் நடக்காது. நான் பல முறை சொல்லிவிட்டேன். சொன்னவர் எப்படிப்பட்டவர்.
ஏற்கனவே பல வழக்கில் தொடர்பு உடையவர். இதே ஆட்சியாளர்கள் அவரை விசாரணைக்கு அழைத்துட்டு போய் 3 மாதம் சிறையில் அடைத்தார்கள். பேட்டி கொடுத்தவர் நில அபகரிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் இருக்கிறவர். கனகராஜ் ஜெயலலிதா டிரைவர் கிடையாது. சசிகலாவுக்கு தான் அவர் ஓட்டுநராக இருந்தார். தவறான தகவலை பத்திரிகையில் வெளிப்படுத்தி வருகிறீர்கள். இனி அப்படி வந்தால் நான் நிதிமன்றத்தில் வழக்கு தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, "நமது அம்மா ஆசிரியராக இருந்த என்னிடம் கோடநாடு குறித்து எழுத வேண்டாம் என்று அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறினார்" என்று மருது அழகுராஜ் கூறினார். மேலுல், ஏன் எழுத வேண்டாம் என்று கேட்டதற்கு, நம்ம ஆட்சியிலேயே நடந்ததால்.. அதைப்பற்றி நாம எழுத வேண்டாம் என்று சொன்னார்.. எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டாம் என சொன்னதற்கான அர்த்தத்தை காலப்போக்கில் நான் புரிந்து கொண்டேன் என்றும் மருது அழகுராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications