சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி சிறுநீர் கழித்த குற்றச்சாட்டு.. போலீஸார் 9 பேர் மீது பாய்ந்தது வழக்கு!
சென்னை: சென்னை கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் 9 போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வியாசர்பாடி அருகே உள்ள புது நகர் பகுதியை சேர்ந்த அப்துல் ரஹீம் என்பவர் தரமணியில் உள்ள சட்டப் பல்கலைக்கழகத்தில் ஐந்தாண்டு சட்டப்படிப்பு படித்து வருகிறார். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாலும் குடும்ப சூழ்நிலை கருதி இரவு நேரங்களில் கடைகளில் பகுதி நேர வேலையும் செய்து வந்திருக்கிறார்.
கடந்த 15-ஆம் தேதி இரவு முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்ததாகவும் அப்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அபராதம்
சாலையில் நடமாடும் போது முகக் கவசம் அணியாமல் சென்றதற்காக அபராதம் கட்டும்படி 6 போலீசார் கூறியதாகவும் அதற்கு தான் முகக்கவசம் அணிந்து தான் வந்துள்ளேன். அதனால் அபராதம் கட்ட முடியாது என அப்துல் ரஹீம் கூறியதாகவும் இதனால் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

வாக்குவாதம் முற்றியது
வாக்குவாதம் முற்றியதில் காவலரை அடிக்க முயன்றதாக கூறி மாணவரை காவல் நிலையத்திற்கு கைது செய்து அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் இரவு ஒரு மணியிலிருந்து காலை 11 மணி வரை போலீஸார் தன்னை அடித்து தாக்கியதுடன் தனது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி தனது முகத்தில் சிறுநீர் கழித்ததாகவும் ரஹீம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொடூரம்
மேலும் கடந்த 15-ஆம் தேதி இரவு, தான் முகக்கவசம் அணிந்து வந்த போது லஞ்சம் பெறும் முயற்சியில் போலீஸார் அபராதம் கட்ட சொல்லியதாகவும் தனது அடையாள அட்டைகளையும் காட்டுவதற்கு அவர்கள் தன்னை அனுமதிக்கவில்லை என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். மேலும் காவல் நிலையத்தில் தன்னை இரவு முழுவதும் கொடூரமாக அடித்து உதைத்ததோடு சுவற்றிலும் முட்டி விட்டதால் முகத்தில் கடும் காயம் ஏற்பட்டதாக புகாரில் அப்துல் தெரிவித்துள்ளார்.

9 போலீஸார் மீது வழக்குப் பதிவு
மாணவர் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில் போலீஸாரை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவரை விடுதலை செய்ய வேண்டும். இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இந்த விவகாரத்தில் கொடுங்கையூர் காவல்நிலைய ஆய்வாளர் நசீமா உட்பட 9 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2 போலீஸார் சஸ்பெண்ட்
சட்டக்கல்லூரி மாணவரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 294(B), 323, 324 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல் ஆய்வாளர் உட்பட 9 போலீஸ்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications