ஸ்டாலினை தொட முடியாது.. கொளத்தூரில் அதிமுவிற்கு 3ம் இடம்.. 2ம் இடத்தில் தவெக! தந்தி டிவி சர்வே
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது? என்பது தொடர்பாக தந்தி டிவி நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் ஸ்டாலின் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் விஜயின் தவெக வேட்பாளர் 2ம் இடம் பிடிப்பார் எனவும், அதிமுக வேட்பாளர் 3வது இடத்துக்கு தள்ளப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் தேர்தல் கள நிலவரம் என்ன? என்பது பற்றி தந்தி டிவி சார்பில் கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தந்தி டிவி சார்பில் மார்ச் 29 ம் தேதி ஏப்ரல் 20ம் தேதி வரை இந்த கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தொகுதி வாரியாக வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் முழுமையான கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி நிலவரம் பற்றி முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த கட்சி வேட்பாளர்கள் எவ்வளவு ஓட்டுகளை பெறுவார்கள்? என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொளத்தூர் சட்டசபை தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் 41 சதவீதம் முதல் 47 சதவீத வாக்குகள் பெற்று வாகை சூட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தை விஜய்யின் தவெக பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தவெக சார்பில் விஎஸ் பாபு வேட்பாளராக களமிறங்கி உள்ள நிலையில் அவர் 28 சதவீதம் முதல் 34 சதவீதம் வரை வாக்குகளை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஎஸ் பாபு என்பவர் முன்னாள் எம்எல்ஏ ஆவார். இவர் கடந்த 2006 சட்டசபை தேர்தலில் சென்னை புரசைவாக்கம் சட்டசை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு சமீபத்தில் தவெகவில் இணைந்து முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கி உள்ளார்.
மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவுக்கு கொளத்தூர் தொகுதி அதிர்ச்சி கொடுத்துள்ளது. கொளத்தூரில் அதிமுகவுக்கு 3ம் இடம் தான் கிடைக்கும் என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் சந்தான கிருஷ்ணன் என்பவர் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவருக்கு 18 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளையில் சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சவுந்தர பாண்டியன் லூதர் சேட் 1 சதவீதம் முதல் 6 சதவீதம் வரையும் மற்றவர்கள் 1 சதவீதம் முதல் 4 சதவீதம் வரையும் வாக்குகள் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் வெல்ல அமோக வாய்ப்புள்ளதாக தந்தி டிவி கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் 70,384 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். அந்த தேர்தலில் ஸ்டாலின் மொத்ததம் 1 லட்சத்து 5 ஆயிரத்து 522 வாக்குகள் வாங்கினார். அதிமுக வேட்பாளர் ஆதி ராஜாராம் 35,138 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் ஜெகதீஷ் குமார் 14,210 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சியின் கேமிலஸ் செல்வா 11,304 வாக்குகள் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications