கொளத்தூர் எம்எல்ஏ விஎஸ் பாபு உடல்நிலை இப்போ எப்படி இருக்கு? - புதிய அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை!
சென்னை: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் எம்.ஜி.எம் மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து வென்றவர். கடந்த 9 ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் இருந்த போது தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களாகியுள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல் நிலை குறித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இன்றும் எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு, சுவாசக் கோளாறு காரணமாக கடந்த 2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவின் தீவிர கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் அவர் தொடர்ந்து இருந்து வருகிறார். அவரது உடல்நலக் குறியீடுகளில் முன்னேற்றம் காணப்படுவதுடன், அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைக்கு அவர் நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
