விஎஸ் பாபு உடலை வீட்டுக்கு அருகே உள்ள மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்க ஏற்பாடு.. நாளை மாலை நல்லடக்கம்!
சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபு இன்று காலமான நிலையில், அவரது உடல் நாளை (நவம்பர் 20) மாலை நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வீழ்த்தி வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவுக்கு, கடந்த செப். 9ஆம் தேதி இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக, செப். 9 ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொளத்தூர் தொகுதி வி.எஸ். பாபு (75), தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார். அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவிலேயே இருந்து வந்தார். அவ்வப்போது, வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கைகளை வெளியிட்டுவந்தது. அதன்பிறகு, ஒன்றை மாதங்களுக்கும் மேலாக உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்படவில்லை.
70 நாட்களாக தொடர் சிகிச்சையில் வி.எஸ்.பாபு இருந்து வந்தாலும், சமீப காலமாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இதற்கிடையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகத் தொடங்கின.
அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் நேற்று, கொளத்தூர் தொகுதி வாக்காளரான தேவராஜன் என்பவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவும் இருந்தது.
இந்த நிலையில் இன்று (நவ. 19) பிற்பகல் 2.24 மணிக்கு விஎஸ் பாபு மாரடைப்பால் காலமானதாக எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவரது மறைவைத் தொடர்ந்து வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்குச் கொண்டுச் செல்லப்பட்டு, அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வி.எஸ். பாபுவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பெரம்பூர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சர் விஜய், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
வி.எஸ். பாபுவின் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபுவின் வீட்டில் போதிய வசதி இல்லாததால், அவரது உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அருகில் உள்ள தனியார் விளையாட்டு திடலில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரது உடல் நாளை (நவம்பர் 20) மாலை 4 மணி அளவில் பல்லவன் சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
