கொங்கில் கொடிநாட்ட போகும் ’கிங்’ யார்? களம் 8ல் மல்லுக்கு நிற்கும் 3 புள்ளிகள்! அண்ணன் தம்பிகளாச்சே!
கோவை: 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்க போகிறது கொங்கு மண்டலம். 68 தொகுதிகள் கொண்ட கொங்கு மண்டலத்தை வென்றால் கோட்டையைப் பிடித்து விடலாம் என்பது தான் அதிமுக -திமுக -தவெகவின் எண்ணம். இதற்காக களத்தில் இறங்கி இருக்கின்றனர் கொங்கு மண்டலத்தின் முக்கிய தளபதிகளான செங்கோட்டையன், எஸ்.பி வேலுமணி, செந்தில் பாலாஜி ஆகியோர்.. இதில் யாருக்கு வெற்றி கிடைக்கப் போகிறது? என்பதுதான் கொங்கு மண்டலத்தில் பேசுபொருளாக இருக்கிறது.
கொங்கு மண்டலத்தை கைப்பற்றவேண்டும் என்ற இலக்குடன் அதிமுக, திமுக, பாஜக உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் தீவிரமான தேர்தல் வியூகங்களில் இறங்கியுள்ளன. இந்த போட்டிக்குள் தற்போது தவெக-வும் நுழைந்துள்ளது.
நடிகர் விஜயின் அணியில் சேர்ந்த செங்கோட்டையன் கொங்கு பகுதிக்கு வருகை தந்ததும், இப்பகுதியில் அரசியல் சூழல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. காரணம் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றால் கோட்டையை பிடித்து விடலாம் என்பது தான்.

2026 தேர்தல்
காரணம் கொங்கு மண்டலம் எனப்படும் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 68 தொகுதிகள் உள்ளன. கடந்த 2021 தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி இங்குள்ள 44 தொகுதிகளை வென்றது. கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளைத் தவிர, பெரும்பாலும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் நீடித்தது. தற்போது மட்டுமல்ல எம்ஜிஆர் காலத்திலிருந்தே கொங்கு பகுதி அதிமுக-வின் ஆதரவு தளமாக இருந்துள்ளது. திரையுலக கவர்ச்சி அதிமுகவின் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம் என மட்டும் சொல்லி விட முடியாது.
கொங்கு மண்டலம்
இதற்கிடையே 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, கோவை மற்றும் அண்டை மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்தது. இந்த நிலையை பயன்படுத்திக் கொண்டே பாஜகவும் தனது கட்சி வலிமையை சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மூலம் இங்கு கட்டியெழுப்பத் தொடங்கியது. தற்போது தங்கள் சொந்த பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை தலைவர் ஆனதாலும் பாஜக கொங்கில் அதிக ஊக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. அதனால் "செங்கோட்டையன் வந்தாலும் கவலை இல்லை" என்ற மனநிலையில் பாஜக-அதிமுக கூட்டணி செயல்படுகிறது.
செங்கோட்டையன்
அதே சமயம் விஜய்க்கும் கொங்கு மண்டலத்தில் ஒரு நிலையான ரசிகர் ஆதரவு வட்டம் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. இந்த ஆதரவை அரசியலாக்கும் பணியை செங்கோட்டையன் முன்னெடுத்து வருகிறார். தன்னை புறக்கணித்த பழனிசாமிக்கு பாடம் புகட்டவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் கொங்கு மண்டலத்தில் தவெக வளர்ச்சிக்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். இதற்காகவே சில மாவட்டங்கள் முழுமையாக அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
செந்தில்பாலாஜி
இந்நிலையில் திமுகவும் கொங்கு மண்டலத்தை நோக்கி வேகமான நகர்வுகளைத் தொடங்கியுள்ளது. கடந்த முறை கரூரில் 4 தொகுதிகளையும் வெற்றி கொண்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை கோவையை குறிவைத்து செயல்படுகின்றது. அதற்காகவே 'அரசியல் ஆக்சன் கிங்' என்று அழைக்கப்படும் செந்தில்பாலாஜியை கோவையில் தங்கவைத்து, அவருக்கு துணையாக அமைச்சர் சக்கரபாணியை அனுப்பி வைத்துள்ளது. மற்ற கட்சிகளில் சிறப்பாக செயல்படும் தளபதிகளை அடையாளம் கண்டு திமுகவில் சேர்க்கும் பணிகளை செந்தில்பாலாஜி தொடங்கியுள்ளார். இதன் ஓர் எடுத்துக்காட்டு சிங்காநல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சின்னசாமி திமுகவில் இணைந்தது.
எஸ் பி வேலுமணி
அதிமுக தரப்பில் எஸ்.பி. வேலுமணி மீண்டும் பத்துக்கு பத்து வெற்றி கோவையில் கிடைக்க வேண்டும் என்று உறுதியாக செயல்படுகிறார். பாஜக கூட்டணியில் திரும்பியதாலும், இரு கட்சிகளும் கொங்கில் வெற்றியை நிச்சயம் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளன. மொத்தத்தில், செந்தில்பாலாஜி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் என்ற மூன்று முக்கிய தளபதிகள் கொங்கு மண்டலத்தில் தங்கள் கட்சிகளை வெற்றிக்குச் இட்டுச் செல்ல வழி வகுக்க முயன்று வருகின்றனர். இவர்கள் அனைவருமே அதிமுகவில் அண்ணன் தம்பிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கொங்கு கோட்டையில் கொடி நாட்டப் போகும் 'கிங்' யார் என்பதே தற்போது அரசியல் வட்டாரங்களில் மிகப்பெரிய கேள்வியாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications