கோயம்பேட்டில் மாறுவேடத்தில்.. இப்ப கோயம்பேடு மார்க்கெட்டில் நிலைமை மோசம்! சென்னை போலீசுக்கு கோரிக்கை
சென்னை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் வரத்துகள் அதிகரித்துள்ளது.. இதுஒருபுறமிருந்தாலும், புதிய கோரிக்கை ஒன்று சென்னை போலீசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் என்ன நடக்கிறது? என்ன கோரிக்கை?
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தை, நம்முடைய கோயம்பேடு மார்க்கெட்தான்.. ஏனென்றால், 1000-க்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக்கடைகள், 2000-க்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் என பிரம்மாண்டமாக கோயம்பேடு மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

மிகப்பெரிய காய்கறி சந்தை என்பதால், கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் இங்கு தினமும் வந்து செல்வார்கள்.. இதன்காரணமாக, போக்குவரத்தும் வெகுவாக பாதித்துவிட நேரிடுகிறது.
கையும் களவுமாக சிக்கிய 3 பேர்
எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் எப்போதுமே ஈடுபட்டு வருகின்றனர்.. அதேபோல, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் அடிக்கடி குற்ற சம்பவங்களும் நடந்துவிடுகின்றன.
கடந்த மாதம்கூட கோயம்பேடு மார்க்கெட்டில், கத்தியுடன் 3 இளைஞர்கள், இரவு நேரங்களில் சுற்றி திரிந்துள்ளனர்.. அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் செல்போனை திருடி, கடைகளிலும் அக்கிரமம் செய்திருந்தனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை தந்திருந்தது. இதையடுதது, அந்த 3 பேரையுமே போலீசார் கைது செய்திருந்தனர்.
தீவிரமான கண்காணிப்பு பணிகள்
அத்துடன், கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள துவங்கினார்கள்.. இதைத்தவிர, மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிக்கின்றனர், மாறுவேடத்திலும் ரோந்து பணிகளில் ஈடுபடுகிறார்கள்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளியாட்கள் கஞ்சா, மது அருந்திவிட்டு அட்டகாசம் செய்வது அதிகரித்து வருவதாக, வியாபாரிகள் மீண்டும் புகார்கள் தெரிவிக்கிறார்கள்.. செல்போன், பைக் திருட்டு போன்றவை அதிகரித்துவிட்டதாம்.. எனவே, இவற்றை தடுக்க இரவு ரோந்திலும் போலீசார் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இரவு நேரத்தில் ரோந்து
இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் சொல்லும்போது, "கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் வெளிநபர்கள் வந்து கஞ்சா, மது அருந்தி அட்டகாசம் செய்கிறார்கள். இதனால், வியாபாரிகள், பெண்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
வியாபாரிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை புறநகர் காவல் நிலையம் பல வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. ஆனால், அது இப்போது உபயோகமின்றி உள்ளது. எனவே, இனிமேலாவது இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வெளிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications