சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல்
சென்னை: சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக இளம்பெண் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றபோது காரில் இடித்து தள்ளி கொலை செய்துள்ள நபர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்தது இலங்கை தமிழரான யாசினி என்ற பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்னையில் கோயம்பேட்டில் உள்ள ஒரு மதுபான பாருக்கு, யாசினி என்ற இளம்பெண் நண்பர்கள் சிலருடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது பாரில் நடனம் ஆடிய போது யாசினி தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியாக தெரிகிறது.

இந்த நிலையில் பாரில் இருந்து வெளியே வந்ததும் யாசினி நண்பருடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதை நோட்டமிட்ட எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் காரில் அவர்களை பாலோ செய்துள்ளனர். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து காரால் இருசக்கர வாகனம் மீது மோதினர். இதில் இளம்பெண் யாசினி மீது கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த யாசினி என்ற பெண் இலங்கை தமிழர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாரில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இச்சவம்பத்தில் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் அறிமுகம் ஆன சென்னை நபர்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் யாசினி (வயது 18). யாசினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையை சேர்ந்த நண்பர் ஒருவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அப்போது இன்ஸ்டாகிராம் நண்பர் அழைத்ததின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாசினி சென்னைக்கு வந்துள்ளார்.
அப்போது அவர்கள் சென்னையில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துள்ளனர். இந்த நிலையில் தான் நேற்று அவர்கள் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள மதுபான பாருக்கு சென்றுள்ளனர். அவர்களுடன் நண்பர்கள் சிலரும் மோட்டார் சைக்கிளில் சென்று இருகின்றனர். மதுபான பாரில் யாசினி மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் டேன்ஸ் ஆடிக்கொண்டு இருந்துள்ளனர்.
பாரில் நடனம் ஆடும் போது தகராறு
நடனம் ஆடும் போது மற்றொரு தரப்பினருக்கும், இளம்பெண் யாசினி தரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றவே பார் உரிமையாளர்கள் அவர்கள் அனைவரையும் வெளியேற்றி உள்ளனர். வெளியில் வந்த பிறகும் அவர்கள் பிரச்சினை ஓய்ந்தபாடில்லை. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்போது, யாசினியும் அவரது தோழியான சிறுமியும் ஒரு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளனர்.
இதனை கவனித்துக்கொண்ட மற்றொரு தரப்பை சேர்ந்தவர்கள் காரில் சென்று யாசினி சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி கீழே விழ வைத்து காரால் ஏற்றி கொலை செய்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே யாசினி உயிரிழந்தார். அவருடன் வந்த சிறுமி படுகாயங்களுடன் சென்னையில் உள்ள கேஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மதுபான பாரில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் காரை ஓட்டியது சிவன் சக்திவேல் என்பதும், அந்த காரில் 6 பேர் இருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது. காரில் திமுக கொடி கட்டி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications