மகிழ்ச்சியுடன் ராஜினாமா.. பாஜகவில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகி.. அண்ணாமலை மீதும் குற்றச்சாட்டு!
தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.
சென்னை: பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து மகிழ்ச்சியுடன் விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டார் என்று கூறிய பாக்கியராஜ், சிடி நிர்மல் குமார் வழியில் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பாஜகவும் அதிமுகவும் இணைந்தே கூட்டணியில் பயணித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பாஜக நிர்வாகிகள் வரிசையாக விலகி அதிமுகவில் இணைவதே இந்த பூசல்களுக்குக் காரணமாக இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக நிர்வாகிகள் விலகல்
அவருக்குப் பிறகு பல பாஜக நிர்வாகிகள் அங்கிருந்து விலகி வருகின்றனர். பாஜகவின் ஓபிசி அணியின் மாநிலச் செயலாளர் அம்மு என்கிற ஜோதி அதிமுகவில் இணைந்தார். அதேபோல் பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலை ஆதரவாளர் அமர் பிரசாத் ட்விட்டரில், கூட்டணிக் கட்சியான அதிமுக இம்மாதிரியான செயலை செய்திருக்கக் கூடாது என்று பதிவிட்டார்.

ஐடி விங் ராஜினாமா
இதன் காரணமாக அதிமுக - பாஜக தலைவர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இருப்பினும் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார். இதனைத் தொடர்ந்து சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் 13 பேர் கூண்டோடு கட்சியில் இருந்து விலகினர். இவர்கள் 13 பேரும் சிடி நிர்மல்குமாரை பின்பற்றி அதிமுகவிலும் இணைந்தனர்.

மகிழ்ச்சியுடன் விலகுகிறேன்
இந்த நிலையில் பாஜகவின் தருமபுரி, கிருஷ்ணகிரி, மேற்கு மாவட்ட கோட்ட சமூக ஊடக பிரிவு பற்றும் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் பாக்கியராஜ் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன். அண்ணாமலைக்கு, சிடி நிர்மல் குமாரின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் சிடி நிர்மல் குமார் வெளியேற வேண்டும் என்று ஒரே முடிவில் அண்ண்ணாமலை இருந்தார்.

சர்வாதிகாரி போல் நடந்த அண்ணாமலை
அதுமட்டுமல்லாமல் தனது இடத்திற்கு சிடி நிர்மல் குமார் வந்துவிடுவார் என்ற அச்சம் அண்ணாமலைக்கு இருந்தது. அதேபோல் பிப்ரவரி மாதம் டெல்லி செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் ஐடி விங் மற்றும் விளையாட்டு மேம்பாடு அணியுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அண்ணாமலை சர்வாதிகாரி போல் அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டார். அதனால் அவருக்கு நேர் எதிர் குணம் கொண்ட சிடி நிர்மல் குமார் வழியில் பயணிப்பதில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications