முதல்வரின் இந்த செயல் தேசிய அளவில் எதிரொலிக்கும்.. ஸ்டாலினை பாராட்டி தள்ளிய கே.எஸ்.அழகிரி
சென்னை: கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதாவது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த முஸ்லீம் அல்லாத இந்து, சீக்கியர்கள், சமணம், பௌத்தம், பார்சி, கிறிஸ்துவம் ஆகியவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்வதே இந்த சட்ட மசோதாவின் நோக்கமாகும்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தலைநகர் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் முதல் 5 மாதங்கள் கடும் போராட்டம் நடந்தது. .
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் 100 நாட்களை கடந்து போராட்டம் நடந்தது. 2019-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி போராட்டத்தில் கலவரம் வெடித்தது. 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன; நொறுக்கப்பட்டன. பாஜகவுக்கு எதிரான மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனி தீர்மானம் கொண்டு வந்தார். இதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக அரசுக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, கடந்த 2 ஆண்டுகளாக இந்திய முஸ்லிம் மக்களைப் பதற்றமான மனநிலையில் மத்திய அரசு வைத்திருக்கிறது. இந்த சட்டத்தைப் பெரும்பாலான எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த சூழலில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனித் தீர்மானம் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு மோடி அரசால் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மை கோட்பாடுகளுக்கு உகந்ததாக இல்லை என்ற கருத்தை முதல்வர் ஆழமாகப் பதிவு செய்துள்ளார். இந்திய நாட்டின் ஒற்றுமை, மத நல்லிணக்கத்தைப் போற்றிப் பாதுகாக்க இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற அவரது கருத்து, ஒட்டுமொத்த இந்திய மக்களின் கருத்தாகவே எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

நாட்டுக்கு அகதிகளாக வருவோரைப் பாகுபடுத்திப் பார்க்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமைந்துள்ளது என்ற அவரது வாதத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை உள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மதத்தைப் பின்பற்றுவதற்கும் அதனைப் பரப்பவும் உரிமை உண்டு. அந்த உரிமையை மறுப்பது சட்ட விரோதமானதாகும்.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. பெரியார், காமராசர் பிறந்த மண்ணில் தீர்மானம் வடிவில் கடுமையான எதிர்ப்புக் குரல் வந்திருப்பது, தேசிய அளவில் விழிப்புணர்வையும், ஆதரவையும் உருவாக்குவதற்குக் காரணமாக அமையும் என்பது உறுதி. இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications