மரத்தடி நிழலில் ஓலை குடிசையில் அமர்ந்து குறி சொன்ன பங்காரு அடிகளார்! KS அழகிரி பகிரும் பிளாஷ்பேக்!
சென்னை: கிருபானந்த வாரியார் மறைவிற்கு பிறகு தமிழ் வழிபாட்டு முறையில் மாபெரும் புரட்சி செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி புகழாரம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல மரத்தடி நிழலில் ஓலை குடிசையில் அமர்ந்து ஆரம்பக்காலத்தில் பங்காரு அடிகளார் குறி சொன்னதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி கூறியிருப்பதாவது;

ஓலை குடிசையில் அமர்ந்து: 1985 ஆம் ஆண்டு மரத்தடி ஒன்றின் கீழ், ஓலை குடிசையில் அமர்ந்து, குறி சொல்ல ஆரம்பித்து, படிப்படியாக மக்களிடையே கடவுள் நம்பிக்கை வளர்த்து, ஆன்மீக புரட்சி செய்து, சாதாரண ஏழை, எளிய, பாமர மக்கள் மத்தியில் பெண் தெய்வ வழிபாட்டை வளர்த்தெடுத்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் தனது 82வது வயதில் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
கோவில் கருவறைக்குள் பெண்கள்: ஒரே தாய், ஒரே குலம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், கடவுள் வழிபாட்டில் ஜாதி சமய வேறுபாடுகளை தகர்த்து, கருவறைக்குள் பெண்களை அனுமதித்து, தரிசிக்க, அபிஷேகம் செய்ய வாய்ப்புகளை வழங்கி மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர். பக்தர்கள் அனைவரும் செவ்வாடை அணிந்து மேல்மருவத்தூரில் சில முக்கியமான நிகழ்வுகளின்போது தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் , அண்டை மாநிலங்களில் இருந்து மொழி வேறுபாடுகளை கடந்து ஆயிரக்கணக்கில் வாகனங்களிலும், பேருந்துகளிலும் மேல்மருவத்தூரில் குவிந்து வழிபட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வழிபாட்டு முறை: இத்தகைய பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களின் வருகையால் ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் வழிபாட்டு முறையை நெறிப்படுத்தினார். திருமுருக கிருபானந்த வாரியார் மறைவிற்கு பிறகு தமிழ் வழிபாட்டு முறையில் மாபெரும் புரட்சி செய்தவர் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார்.
சைக்கிள் பயணம் : ஊராட்சி பள்ளியில் ஒரு சாதாரண ஆசிரியராக இருந்து, சைக்கிள் பயணம் செய்து, எளிய வாழ்க்கையை மேற்கொண்ட பங்காரு அடிகளார் நாடுபோற்றும் ஆன்மீக குருவாக உருவெடுத்தார். கடவுள் வழிபாட்டின் மூலம் பக்தியை வளர்த்த அதே நேரத்தில், கோயில் நிர்வாகத்தில் கிடைத்த வருமானத்தின் மூலம் கல்வித்துறையில் நுழைந்து மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, பொறியியல் கல்லூரி, பள்ளிக் கல்வி என நிறுவனங்களை தொடங்கி அடித்தட்டு மக்கள் வாழ்க்கையில் ஏற்றம் பெறுகிற வகையில் பொது நல சேவை செய்தவர் பங்காரு அடிகளார்.
அவரது மறைவு ஆன்மீக உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரை வழிபடும் எண்ணற்ற பக்தர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications