குலதெய்வ சாபம்.. கோபம் தீர இதை செய்ய மறக்காதீங்க.. நல்லது சீக்கிரம் நடக்கும்
சென்னை: குல தெய்வ சாபத்திற்கும் பித்ரு சாபத்திற்கும் ஒரு போதும் ஆளாகக் கூடாது. குல தெய்வத்தின் அருளும் பித்ருக்களின் ஆசியும் கிடைக்காவிட்டால் நம்மால் எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய முடியாது. குல தெய்வ சாபம் தீர என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
எந்த காரியம் செய்வதற்கு முன்பும் குல தெய்வத்தை கும்பிடுவது அவசியமாகிறது. பயணம் செல்வதற்கு முன்பு கூட குல தெய்வத்தை வணங்கினால் நம்முடைய குல தெய்வமே நமக்கு வழித்துணையாக வரும். குலதெய்வ வழிபாட்டை முக்கியம் என்று சொல்லுவதற்கு காரணம் ஒவ்வொருவரின் குலதெய்வம் மட்டுமே அவர்களுக்கு நன்மை செய்யும். வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கினாலும் குலதெய்வம் வழியாக மட்டுமே அனைத்தும் கிடைக்கும் என்பதை பல ஆன்மீகவழிகளில் முயற்சி செய்து பார்த்து சொல்லும் மகான்களின் உண்மை

நம்முடைய வீட்டில் பூஜை அறையில் எத்தனை சாமிகளின் படங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் படம் தான் முதலில் இடம் பெற வேண்டும்.
நம் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த தெய்வத்தை ஆண்டுக்கு ஒருமுறையாவது கும்பிட்டு வந்தால் நோய்கள் தீரும், கஷ்டங்கள் காணாமல் போகும். வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இன்றைய கால கட்டத்தில் குலதெய்வத்தை பல பேர் மறந்துவிடுகிறார்கள். பல வீடுகளை பார்க்கும்போதே குலதெய்வ அருள் இல்லாமல் இருக்கிறது.
குல தெய்வத்தின் அருள் கிடைத்தால் நாம் எத்தனை பெரிய காரியத்தையும் ஈஸியாக சாதித்து விட முடியும். குலதெய்வத்தின் அருள் கிடைக்கவில்லை என்றால் நம்மால் முன்னேற்றம் அடைய முடியாது.
ஒருவரின் குடும்பம் ஆல்போல் தழைக்க குல தெய்வ வழிபாடு அவசியம். ஆன்மீக பயணம் செய்து நீங்கள் எவ்வளவு பெரிய கடவுளை வழிபட்டாலும் குடம் குடமாக பாலபிஷேகம் செய்தாலும் குலதெய்வத்தின் அருள் இல்லை என்றால் வாழும் வாழ்க்கையில் ஒரு திருப்தி இருக்காது. ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருக்கும். எனவே குல தெய்வ வழிபாட்டை மறக்கக் கூடாது.
ஜாதகத்தில் குறைகள் இல்லாத நிலையில் ஒரு மனிதனுக்கு பாதிப்புகளும் பிரச்னைகளும் இருக்கின்றது என்றால் அதற்கு குலதெய்வத்தினை வழிபடாத குற்றம் காரணமாக இருக்கும். அதேபோல கிரகங்களின் நல்ல பலன்களும் முழுமையாக ஒருவருக்கு பலன் தர வேண்டுமென்றால் குலதெய்வ அனுக்கிரகம் மிக முக்கியமாகத் தேவை. குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ, திருமணம் தடை பட்டாலோ, புத்திர பாக்கியம் இல்லாமல் போனாலோ ஏதேனும் தீமைகள் ஏற்பட்டாலோ குல தெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது. குல தெய்வத்தை சாந்திப்படுத்த நாம் வணங்கினால் மட்டுமே குறைகள் நீங்கும்.
ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்களுடைய குல தெய்வத்தை நினைக்காமல், குலதெய்வ கோவிலுக்கு செல்லாமல், குலதெய்வ வழிபாடு செய்யாமல் இருந்தால், குலதெய்வ கோபத்திற்கு ஆளாக கூடிய சூழ்நிலை ஏற்படும். தாய் தந்தையை மதிக்காமல் இருப்பது, பெற்றோர்களை வயதான காலத்தில் கைவிடுவது, முன்னோர்கள் இறந்த பின்பு அவர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை முறையாக செய்யாமல் விடுவது, போன்ற தவறுகளை நீங்கள் செய்தாலும் உங்கள் குடும்பத்திற்கு குலதெய்வ சாபம் ஏற்படும்.
நாம் செய்த தவறை எண்ணி குலதெய்வத்திடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். மீண்டும் இப்படி ஒரு தவறை செய்ய மாட்டேன் என்ற உறுதி மொழியையும் குலதெய்வத்திடம் கொடுத்து விடுங்கள். அதன் பிறகு குலதெய்வத்தை நினைத்து உங்களுடைய வீட்டில் சின்னதாக ஒரு பூஜையை செய்ய வேண்டும்.
பூஜைஅறையை அலங்காரம் செய்து விளக்கேற்றி விட்டு, குலதெய்வ படத்தின் முன்பு 1 டம்ளரில் தண்ணீர் ஊற்றி வைத்து, ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு தாம்பூல தட்டில், ஒரு மஞ்சள் துணியின் மேல் ஒரு கைப்பிடி அளவு சில்லறை காசுகளை வைத்து முடி போட்டு வைக்க வேண்டும்.
பிறகு உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை 27 முறை உச்சரிக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் எடுத்து வைத்திருக்கும் சில்லறை காசு முடிச்சை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். நீங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும்போது அதை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் உண்டியலில் செலுத்தி விடுங்கள்.இதன் மூலம் குலதெய்வத்தின் கோபம் நீங்கும். குல தெய்வம் உங்கள் வீடு தேடி வரும். தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் நிறைவேறும்.












Click it and Unblock the Notifications