குழந்தைகளை கொன்ற வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை! குன்றத்தூர் அபிராமியின் அடுத்த மூவ்!
சென்னை: கள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற வழக்கில் சாகும் வரை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து குன்றத்தூர் அபிராமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் சாகும் வரை தண்டனை என்பதை நிறுத்தி வைக்குமாறு அந்த மனுவில் அபிராமி கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்தவர் விஜய். இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அபிராமி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அஜய். கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு பிரபலமான அபிராமிக்கு அந்த பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் விஜய்யைவிட அபிராமிக்கு சுந்தரத்துடன் வாழ்ந்ததே பிடித்திருந்ததாம். இதனால் இவர்களது கள்ளக்காதல் தொடர்ந்து கொண்டே வந்தது.
ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் கணவர் விஜய்க்கு தெரியவந்ததை அடுத்து அவர் அபிராமியை கண்டித்தார். ஆனாலும் அபிராமியின் ஆட்டம் அடங்கவில்லை. இது குறித்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாமல் சுந்தரத்தின் வீட்டிற்கே அபிராமி சென்றுவிட்டாராம்.
இந்த விவகாரம் விஜய்க்கு தெரியவந்து அதிர்ச்சி அடைந்த அவர், தனது மாமனார், மாமியாருடன் சென்று அபிராமியை வீட்டிற்கு அழைத்து வந்தார். இரு குழந்தைகள் இருக்கும் போது இப்படி செய்யக் கூடாது என அபிராமியின் பெற்றோர் அறிவுரை வழங்கினராம்.
இதனால் குழந்தைகள் மீது அபிராமிக்கு வெறுப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அபிராமி, தனது காதலன் சுந்தரத்துடன் வாழ குழந்தைகளையும் கணவரையும் கொல்ல முடிவு தெய்தாராம்.
இதற்காக கடந்த 2018ஆம் ஆண்டு தனது இரு குழந்தைகள் மற்றும் கணவருக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். ஆனால் அதில் விஜய், அஜய் உயிர் தப்பினர். ஆனால் கார்னிகா மட்டும் படுக்கையில் அசையாமல் இருந்தாராம்.
கார்னிகாவை சோதித்த போது அவர் இறந்தது அபிராமிக்கு தெரியவந்தது. இதையடுத்து அன்று காலை கணவர் அலுவலகத்திற்கு சென்றதும், கார்னிகா குறித்து அஜய்க்கு தெரிந்துவிட்டால் என்ன செய்வது என நினைத்த அபிராமி, அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டார். பின்னர் காதலன் விஜய் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆசையாக கட்டிய தாலியை விற்று பணத்தை எடுத்து கொண்டு நாகர்கோவிலுக்கு அபிராமி தப்பிவிட்டார்.
இதையடுத்து காதலன் சுந்தரத்தை பேச வைத்து அபிராமியின் இருப்பிடத்தை அறிந்த போலீஸார், நாகர்கோவிலுக்கு போய் அவரை கைது செய்தனர். தற்போது புழல் சிறையில் இருந்து வரும் நிலையில் இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த மாதம் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது கள்ளக்காதலனுக்காக பெற்ற குழந்தைகளை கொன்ற தாய் அபிராமி, சுந்தரம் ஆகிய இருவரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் அவர்கள் இருவரும் சாகும் வரை சிறையில் இருக்க தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி குன்றத்தூர் அபிராமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது குறித்து காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications