விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியும் காப்பியா.. திருவள்ளுவர் எழுதியது அச்சு அசலா இருக்கே - எந்த குறள்?
சென்னை: நடிகர் விஜய் நேற்று லியோ பட வெற்றி விழாவில் தெரிவித்த குட்டி ஸ்டோரி திருக்குறளின் காப்பி என்று கூறப்படுகிறது. அது என்ன குறள். விரிவாக பார்ப்போம்.
லோகோஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது லியோ திரைப்படம். இசை வெளியீட்டு விழா ரத்து, அதிகாலை காட்சிக்கு அனுமதி மறுப்பு, தயாரிப்பாளர் - திரையரங்க உரிமையாளர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாடு என அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இப்படம் வெளியானது. ஆயிரம் கோடி ரூபாய் கலெக்சனை தொடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கலவையான விமர்சனங்களால் அதை அடைய முடியவில்லை.

அதே நேரம் விக்ரம், பொன்னியின் செல்வன், ஜெயிலர் படங்களின் வசூலை லியோ முறியடித்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில், நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அர்ஜுன், திரிஷா, இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் மன்சூர் அலிக்கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆடியோ வெளியிட்டு விழாவில் நடிகர் விஜய்யின் பேச்சு, குட்டி ஸ்டோரியை கேட்க தவறிய ரசிகர்கள், நேற்றைய விழாவில் அவரது பேச்சை கண்டு ரசித்தனர். குறிப்பாக அவர் சொன்ன குட்டி ஸ்டோரியை பலர் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள். அவர் கூறியதாவது, "ஒரு காட்டில் யானை, புலி, மான், காக்கா, கழுகு என நிறைய மிருகங்கள் இருந்தன. காட்டுக்கு 2 பேர் வேட்டைக்கு போனார்கள். ஒருத்தர் வில் அம்போடு போய் முயலை பிடித்து வந்தார். இன்னொருவர் ஈட்டியோடு போய் யானைக்கு குறி வைத்து ஒன்றுமே இல்லாமல் வந்தார். இதில் யார் வெற்றியாளர்? நிச்சயமாக யானைக்கு குறி வைத்தவர்தான் வெற்றியாளர்.
பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள்." என்றார்.
இதில் விஜய் பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டினாலும், அவர் சொன்னது திருக்குறளில் வள்ளுவர் சொன்ன வரிகள் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். வள்ளுவர் சொன்னதை அப்படியே தனது குட்டி ஸ்டோரியாக விஜய் கூறிவிட்டதாகவும் 772 வது குறளை குறிப்பிட்டு உள்ளார்கள். அதில் வள்ளுவர்,
"கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதற்கு தமிழறிஞர் எழுதிய விளக்கத்தை பார்ப்போம். மு. வரதராசனார் எழுதிய விளக்கத்தில், "காட்டில் ஓடுகின்ற முயலை நோக்கி குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்ட வெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதி இருக்கும் விளக்கத்தில், "வலிவு மிகுந்த யானைக்குக் குறிவைத்து, அந்தக் குறிதப்பினாலும்கூட அது, வலிவற்ற முயலுக்குக் குறிவைத்து அதனை வீழ்த்துவதைக் காட்டிலும் சிறப்புடையது." என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
சாலமன் பாப்பையா தனது விளக்க உரையில், "காட்டில் அஞ்சி ஓடும் முயலைக் கொன்ற அம்பைப் பிடித்திருப்பதை விட, எதிர்த்து வரும் யானையின் மீது பட்டும், அதை வீழ்த்தாத வேலைப் பிடித்திருப்பது நல்லது." என குறிப்பிட்டு உள்ளார்.
புலியூர்க் கேசிகன் தனது விளக்கத்தில், "காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும்." என தெரிவித்து இருக்கிறார்.












Click it and Unblock the Notifications