மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியால் பாஜகவில் சேர துடிக்கும் லட்சத் தீவு முஸ்லிம்கள்- சொல்வது வானதி
சென்னை: பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியால் பாஜகவில் இணைவதற்கு லட்சத்தீவு பிரதேச முஸ்லிம்கள் முன்வருவதாக பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் வானதி சீனிவாசன் விரிவாக எழுதியிருப்பதாவது: டிசம்பர் 21- தேதி புதன்கிழமை காலை, கொச்சியிலிருந்து விமானத்தில் லட்சத் தீவில் உள்ள 'அகட்டி' என்ற சிறு தீவை வந்தடைந்தேன். லட்சத் தீவுக்கு நான் வருவது இதுவே முதல் முறை. இந்திய வரைபடத்தில் சிறு சிறு புள்ளிகளாக இருக்கும் லட்சத் தீவை பார்த்து வியந்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள எட்டு யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத் தீவுகள், கேரளத்தை ஒட்டிய அரபிக் கடற்கரையில் இருந்து, சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பெயரைப் போலவே தீவுகளின் கூட்டம் தான் லட்சத் தீவுகள். ஆனால், லட்சம் தீவுகள் எல்லாம் இல்லை.36 தீவுகள் இருக்கின்றன. இதில், கவரட்டி, மினிக்கோய், கல்பேனி, அந்தரோத், அகட்டி, அமினி, பங்கரா, செட்லட், பிட்ரா, கட்மட், கில்டன் ஆகிய தீவுகள் முக்கியமானவை.

10 தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். 17 தீவுகளில் மக்கள் வசிக்கவில்லை. நான்கு தீவுகள் மிக மிக சிறியவை. ஐந்து தீவுகள் நீரில் மூழ்கியுள்ளன. தீவுகள் ஒவ்வொன்றுக்கும் இடையே படகில் இரண்டு மணியிலிருந்து, மூன்று மணி நேரம் வரை பயணிக்க வேண்டியிருக்கிறது.
'கவரட்டி' தீவுதான் லட்சத்தீவுகளின் தலைநகரம். இத்தீவில் 14 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். அரசு அலுவலகங்கள் இங்கு அமைந்துள்ளன. கடல் வழியாகவும், வான் வழியாகவும் மட்டுமே லட்சத் தீவுகளை வந்தடைய முடியும். கொச்சியிலிருந்து இருந்து கப்பல் மூலம் 14 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை பயணித்து லட்சத் தீவுகளை அடையலாம். வான் வழியாக கொச்சியிலிருந்து, 'அகட்டி' விமான நிலையத்தில் வந்திறங்கலாம்.
அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் ’ஷாக்’.. கட்சி நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் திருட்டு.. போலீசில் புகார்!
அகட்டி தீவு நீளமாக அதாவது டென்னிஸ் பேட் போல அமைந்துள்ளது. விமானங்கள் தரையிறங்க நீளமான ஓடு பாதை தேவை என்பதால், இந்த அகட்டி தீவில் விமான நிலையம் அமைந்துள்ளது. சிறு விமானங்கள் தான் இங்கு தரையிறங்க முடியும். நாள் ஒன்றுக்கு ஒரு விமானம் தான் வருகிறது. சமீபத்தில்தான் அதனை இரண்டாக மாற்றிிருக்கிறார்கள்.

லட்சத் தீவுகளின் மக்கள் தொகை சுமார் 75 ஆயிரம் மட்டுமே. பரப்பளவு 32.62 சதுர கிலோ மீட்டர். ஒரு மக்களவைத் தொகுதி. சட்டமன்றம் இல்லை. நிர்வாக அதிகாரி தான், லட்சத் தீவுகளை நிர்வகிக்கிறார். இப்போது பிரபுல் பட்டேல் நிர்வாக அதிகாரி.
லட்சத் தீவுகளைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இருக்கின்றன. புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற இலக்கியங்களில் சேர மன்னர்களின் ஆளுகையில் இத்தீவுகள் இருந்ததாக குறிப்புகள் உள்ளதாக சொல்கிறார்கள். பல்லவ மன்னர்களின் ஆட்சியின் கீழும் இத்தீவு இருந்துள்ளது. சேர மன்னர் சேரமான் பெருமாள் ஆட்சியின்போது அதிகமான மக்கள் குடியேறியதாக படித்த நினைவுகள் வந்தன.
போர்ச்சுகீசியர்கள், திப்புசுல்தான், கண்ணூர் அரச குடும்பத்தினர், ஆங்கிலேயர்கள் என பல்வேறு ஆளுகையின்கீழ் லட்சத் தீவுகள் இருந்துள்ளது. கடல் வழி வணிகத்திற்கான முக்கிய மையமாக இருந்துள்ளதால், இத்தீவுகள் எப்போதுமே முக்கியத்துவம் பெற்று இருந்தததை வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. இதனால், லட்சத் தீவை, லட்சத் தீபம் என்றும் அழைக்கிறார்கள். வணிகத் தொடர்புக்கு வழிகாட்டும் விளக்காக இத்தீவுகள் இருப்பதால் அப்படி அழைத்துள்ளனர். இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், அனுமதி பெற்ற பிறகே லட்சத் தீவுகளுக்குள் நுழைய முடியும். அனுமதி சீட்டை காட்டினால்தான், கொச்சியிலிருந்து விமானம் ஏற அனுமதிக்கிறார்கள். வெளிநாட்டினர் என்றால், மத்திய உள்துறையிடம் அனுமதி பெற்றாக வேண்டும். வடகிழக்கு மாநிலங்களிலும் பர்மிட் முறை உள்ளது. ஆனால், அங்கு சென்று இறங்கிய பிறகு பர்மிட் வாங்கினால் போதுமானது. ஆனால், லட்சத்தீவுகளுக்குள் நுழைய வேண்டுமானால், முன்கூட்டியே பர்மிட் வாங்கியாக வேண்டும்.

லட்சத்தீவுகளில் வந்திறங்கிய பிறகு பர்மிட் வாங்கும் முறையை கொண்டு வந்தால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்று இங்குள்ள மக்களில் ஒரு பகுதியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். லட்சத்தீவுகளில் 98 சதவீதம் பேர் மலையாளம் பேசும் முஸ்லிம்கள். பழங்குடியினர். மினிகோய் தீவில் உள்ளவர்கள், மாலத் தீவு அருகில் இருப்பதால், மாலே மொழி பேசுகிறார்கள். ஒவ்வொரு தீவுக்கும் தனித்தனியாக ஒரு மொழி உண்டு. ஆனால், பொதுவான மொழியாக மலையாளம் உள்ளது. 150 பேர் வசிக்கும் தீவும் உள்ளது. 15,000 ஆயிரம் பேர் வசிக்கும் தீவும் உள்ளது.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்த பிறகு, லட்சத் தீவுகளின் வளர்ச்சியில் அதிக கவனம் கொடுக்கப்பட்டுள்ளது. சாலைகள், தொலைத்தொடர்பு, மின்சார வசதிகள் என அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறிது சிறிதாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிர்வாக அதிகாரியான பிரபுல் பட்டேல் கொண்டு வந்த, சீர்திருத்தங்களை ஆரம்பத்தில், மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், இந்த சீர்திருத்தங்கள் தங்கள் நலனுக்கானவை என்பதை, இப்போது மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

லட்சத்தீவு மக்கள் மிகவும் அமைதியானவர்கள். வெள்ளந்தி குணம் கொண்டவர்களாக இருக்கின்றனர். மதத்தை தீவிரமாக பின்பற்றக்கூடியவர்களாக இல்லை. மீன் பிடித்தல் தான் முக்கியத் தொழில். அகட்டி தீவில் விமான நிலையத்திலிருந்து இறங்கினால், இரு பக்கமும் கடல். நடுவில் சாலை. மொத்தம் எட்டு கிலோ மீட்டர் சாலைதான் இத்தீவில். எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள்.
திருமணம் என்றால் அத்தீவில் உள்ளவர்கள் அனைவரும் வந்து விடுகிறார்கள். மணப்பெண்ணின் தந்தை, பெண்ணின் கையை பிடித்து, மணமகனிடம் ஒப்படைப்பதுதான் திருமண சடங்கு. இது முடிந்ததும் ஆடல், பாடல் கொண்டாட்டங்கள், விருந்து துவங்கி விடுகிறது.
திருமணம் செய்ய பெண்களுக்கு, ஆண்கள்தான் பணம், நகைகள் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதனால், பெண் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனாலும், 1,000 ஆண்களுக்கு 950 பெண்கள்தான் இருக்கின்றனர். கனவன் மரணம் அடைந்தால் மனைவி, வெள்ளை ஆடை அணிந்து, நான்கரை மாதங்கள் வீட்டிலிருக்கும் இஸ்லாமிய நடைமுறையை தீவிரமாக பின்பற்றுகிறார்கள்.
பா.ஜ., நிர்வாகி சலீம் என்பவர் இறந்து விட்டதால் அவரது வீட்டிற்கு நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். அவரது மனைவி துர்ரத்திற்கு ஆறுதல் தெரிவித்தோம். அவரும் வெள்ளை ஆடை அணிந்து வீட்டிலிருக்கும் நடைமுறையை பின்பற்றி வருகிறார். இன்னும் ஒரு மாதத்தில் வெளியே வந்து விடுவேன் என்றார். சிறு குழந்தைகள் இருக்கிறார்கள். சிறு தொழில் செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். அவருக்கு உதவி செய்வதாக உறுதி
அளித்தேன்.

லட்சத் தீவுகளில் நம்மூர் போல கடலில் அலைகள் ஆர்ப்பரிப்பதை பார்க்க முடியவில்லை. தீவுக் கூட்டங்கள் ஒன்றுக்கொன்று இயற்கையின் அரவணைப்பில் இருக்கின்றன. ஒவ்வொரு தீவைச் சுற்றிலும் பாறைகள் இருக்கின்றன. கடலில் இருந்து சற்று உள்வாங்கிய பகுதி என்பதால் அலைகள் இல்லை. அமைதியான கடலை பார்ப்பதை ஆச்சரியம் மட்டுமல்ல, பேரழகும்கூட.
நட்சத்திர ஹோட்டலில் இருக்கும் நீச்சல் குளம் ஆயிரம் மடங்கு பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது இங்குள்ள கடல். கண்ணாடி போன்று, சுத்தமான தண்ணீர். மாசுபடாத, இயற்கை அழகான கடலைப் பார்க்க வேண்டுமானால் லட்சத் தீவுகளுக்கு செல்லலாம். கடற்கரையின் அழகில், லட்சத் தீவுகள், அந்தமான் நிகோபர் தீவுகளுடன் உலகின் எந்த நாடும் போட்டி போட முடியாது.
சூரை மீன் எனப்படும் டூனா (Tuna Fish) எனப்படும் மீன்களை, தூண்டிலில் பிடிக்கிறார்கள். வலை போட்டு ஏன் பிடிப்பதில்லை என்று அங்குள்ள மீனவர்களிடம் கேட்டேன். வலை போட்டு பிடித்தால் மற்ற வகை மீன்களும் நிறைய கிடைக்கும். அதனை பாதுகாக்கும் வசதிகள் இல்லை. சூரை மீன்கள், மாசு கருவாடு தயாரிக்க அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இங்கு பிடிக்கப்படும் மீன்களை வாங்க, தூத்துக்குடி, மங்களூர், கொச்சினில் இருந்து வியபாரிகள் இங்கு குவிகின்றனர்.
சூரை மீன்களை, பெரிய கொப்பரையில் போட்டு, சுமார் இரண்டு மணி நேரம் வேக வைக்கிறார்கள். வெந்த மீன்களை இரும்பு வலை மீது பரப்பி, கீழே புகை மூட்டம் போடுகிறார்கள். பிறகு கடற்கரையில் மரப்பலகைகள், முள் கூரை அமைத்து அதன் மீது போட்டு காய வைக்கிறார்கள். பிறகு அது மாசி கருவாட்டுக்காக, தூத்துக்குடி, இலங்கை வழியாக உலகின் பல நாடுகளுக்கு செல்கிறது. சூரை மீனுக்கும், மாசி கருவாட்டுக்கும் பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது. இந்த வியாபாரத் தொடர்புகள் நேரடியாக கிடைத்தால் உதவியாக இருக்கும் என அங்குள்ள மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் அவர்களும், மத்திய வேளாண்மை துறை இணை அமைச்சர் ஷோபா அவர்களும், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக லட்சத் தீவுகளுக்கு வருகை தந்துள்ளனர். அப்போது, மீனவர்களுக்கு படகுகள் வாங்கவும், பிரதமரின் மீனவர்களுக்கு திட்டங்களின்கீழ் உதவி செய்ய உறுதி அளித்ததாகவும், அதன்படி உதவிகள் கிடைத்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
அனைத்த தீவுகளிலும் கல்லூரிகள் இல்லை. தலைநகரான கவரட்டி தீவில்தான் கல்லூரி உள்ளது. படித்தவர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் இல்லை. மற்ற மாநிலங்களுக்குதான் செல்ல வேண்டும். லட்சத் தீவுகளில் என்னவெல்லாம் இல்லை என்று கேட்டபோது, அவர்கள் சொன்னது பெரும் ஆச்சரியத்தை அளித்தது. நாய்கள் இல்லை. பாம்புகள் இல்லை. திருடர்கள் இல்லை என்றார்கள். லட்சத் தீவுகளில் குற்றச் சம்பவங்கள் அரிதினும், அரிதாகவே பதிவாகிறது.

விமான நிலையத்திலிருந்து நேராக, கவரட்டி பாஜக அலுவலகம் சென்றோம். மீன் வகைகளுடன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, சிறு அருங்காட்சியகம் சென்றோம். லட்சத் தீவில் புத்த மதத்தினரும் இருந்துள்ளது. அதற்கு அடையாளமாக இருந்த உடைபட்ட புத்தரின் சிலைகளை காட்சிக்கு வைத்துள்ளது. பழமையான திருக்குரான் பிரதி ஒன்றும் உள்ளது. சேர மன்னர் சேரமான் பெருமாள், முஸ்லிம் மதத்திற்கு மாறிய பிறகுதான், இத்தீவில் முஸ்லிம் மதம் வந்ததாக சொன்னர்கள். அருங்காட்சியகத்தை பார்த்துவிட்டு தீவஸ்ரீ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். இந்த தொண்டு நிறுவனம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாயிலாக, இருக்கும் நிலத்தில் விவசாயம் செய்வது, மசாலா பொருட்கள் செய்வது, தையல் பயிற்சி அளித்து வருகிறார்கள். அந்த பெண்களுடன் கலந்துரையாடினேன். அவர்கள் பிரச்னைகளை எடுத்துக் கூறினார்கள். மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டுச் சென்று உதவி செய்வதாக உறுதி அளித்தேன். பிறகு, சுய உதவிக்குழு பெண்களுடன் இணைந்து தேநீர் அருந்தினோம்.
அப்போது, தமிழகத்தை சேர்ந்த நான்கைந்து பேர் என்னிடம் வந்து, உங்களை, தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம். நீங்கள் தமிழகத்தில் இருந்து தானே வருகிறீர்கள் என்றார்கள். கட்டுமானப் பணிக்காக இங்கு வந்திருப்பதாகவும், சுமார் 500 தமிழர்கள் இங்கு வசிப்பதாகவும் கூறினார்கள், தினமும் 1,200 ரூபாய் கிடைப்பதாக சொன்னார்கள். இந்த சம்பளம் தமிழகத்திலேயே கிடைக்குமே. அதற்காகவா இவ்வளவு தொலைவு வந்தீர்கள் என்று கேட்டேன். தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் இருக்கிறது. உடல் உழைப்பு தொழிலாளர்களின் ஊதியம் மது குடிக்கவே சென்று விடும். லட்சத் தீவுகளில் மதுக்கடைகள் இல்லை. இதனால், அத்தியாவசிய செலவுகள் தவிர, ஊதியத்தை சேமிக்க முடிகிறது என்றார்கள். ஆச்சரியமாக இருந்தது.
லட்சத் தீவுகளில் மதுபான உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை உள்ளது. மக்கள் வசிக்காத, சுற்றுலா பயணிகளுக்காகவே உள்ள பங்காரா தீவில் மட்டும் மதுவுக்கு அனுமதி உள்ளது. பிறகு சூரிய அஸ்தமனத்தை பார்க்க கடற்கரைக்கு அழைத்துச் சென்றார்கள். அற்புதமான காட்சி அது. வெண்ணையே மணலானது போல, தூய்மையான மணற்பரப்பு. அழகான கடல். கண்ணாடி போன்ற தண்ணீர். பவளப் பாறைகள் டர்காய்ஸ் நீலம், பச்சை நிறங்களில் கடலுக்கடியில் மின்னுகின்றன. மனதை மயக்கிய மாலைபொழுதாக அமைந்தது. மிகமிக அற்புதமான இயற்கை காட்சிகள். சிறிது நேரம் நடந்துவிட்டு, மகளிரணி நிர்வாகிகளுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் பேசும் வார்த்தைகளுக்கு பின்னணி இசை அமைப்பது போல, அலைகளின் ஓசை இருந்தது. சிறிது சிறிதாக இருள் கவ்வ ஆரம்பித்தது. சிறிது நேரம் கண்களை மூடி தியானம் செய்தேன். இயற்கையோடு நம்மை ஒப்படைக்கும்போது மனம் வேறு உலகிற்கு சென்று விடுகிறது. நாம் யார் என்பதே மறந்து விடுகிறது. நம்மையை மறநது விட்டால், நம்மை சூழ்ந்திருக்கும் பிரச்னைகளும், கவலைகளும் மறந்து விடும். அப்படியொரு அற்புதம் எனக்கு கிட்டியது. இரவு கட்சி நிர்வாகிகளுடன் உணவு அருந்தி விட்டு உறங்கச் சென்றேன்.
மறுநாள் டிசம்பர் 22-ம் தேதி காலை எழுந்ததும் பங்காரா தீவுக்கு சென்றோம். இத்தீவை பூமியின் சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். எங்கு நோக்கினும் காணும் காட்சிகள், இதுவரை எங்கு கண்டிராத இயற்கையின் அற்புதம். நீலம், பச்சை நிற கற்களுடன் கடலை பார்க்கும்போது, தண்ணீரின் நிறமும் நீலமும், பச்சையும் கலந்து பேழகை கொடுக்கிறது.
பங்காரா தீவில் மக்கள் வசிக்கவில்லை. சுற்றுலாத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குடில்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆக்சிஜன், பாதுகாப்பு உடைகளுடன் கடலுக்குள் நடந்து சென்று பவளப் பாறைகள், மணல் திட்டுகள், மீன்கள், கடல் ஆமைகளை பார்த்தோம். இதற்கு முன்பு இந்தோனேசியா, மலேசியாவில் கடலுக்குள் சென்று பார்த்திருந்தாலும், லட்சத்தீவு அனுபவே சிறப்பாக இருந்தது. கடலுக்குள் இருந்து வரவே மனமில்லை.
படகில் பயணித்து கடலின் பேரழகை ரசித்து கொண்டே மதிய உணவு சாப்பிட்டோம். பனை மரத்தில் இருந்து பதநீர் எடுப்பதுபோல, தென்னை மரத்திலிருந்து நீரா என்ற பானத்தை எடுக்கிறார்கள். நம் தமிழகத்திலும் இப்போது நீரா எடுக்கிறார்கள். நீராவிலிருந்து வெல்லமும் தயாரிக்கிறார்கள். நீராவை பாகு போல செய்தும் வைத்துக் கொள்கிறார்கள். இந்த தென்னை பாகு, வெல்லத்தை தான் இனிப்புக்காகப் பயன்படுத்துகிறார்கள். பங்கரா தீவில் சுற்றுலா பயணிகள் தங்க சிறுசிறு வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
லட்சத்தீவு மக்களைத் தவிர இங்கு யாரும் நிலம் வாங்க முடியாது. லட்சத் தீவை சேர்ந்த ஆணோ, பெண்ணோ, வெளி நபர்களை திருமணம் செய்தால், பழங்குடியினர் அந்தஸ்து உள்ளிட்ட மற்ற உரிமைகளை இழந்து விடுகின்றனர். ஆனாலும், காதலுக்காக உரிமையை இழந்த சிலரையும் நான் சந்தித்தேன்.
இங்கு ரிசார்ட் வைத்திருக்கும் பா.ஜ., நிர்வாகி ஒருவர் என்னை சந்திக்க வந்திருந்தார். இயற்கையழகு கொட்டிக் கிடக்கம் அற்புதமான இடமான இங்கு மிகப் பெரிய ஹோட்டல்கள் ஏன் இல்லை என்று கேட்டேன். லட்சத் தீவுகள் என்பது மலைகளின் தொடர்ச்சியாக உள்ளது. கடலுக்குள் இறங்கினால், திடீரென மலைச்சரிவு இருக்கும். இதனால், மிகப்பெரிய கட்டிடங்களைக் கட்ட முடியாது. அஸ்திவாரம் தோண்டினால், பாறைகளை குடைந்தால், தீவு இரண்டாக பிளந்து விடும் அபாயம் உள்ளது. எனவேதான், பெரிய ஹோட்டல்கள் இங்கு இல்லை என்றார். அதுமட்டுமல்ல, இதுவொரு எல்லைப் பகுதி என்பதால், இந்திய கடற்படையின் முக்கிய மையமாகவும் லட்சத்தீவுகள் உள்ளன. அந்தமான் நிகோபர் தீவு முதல் மினிகோய் தீவு வரை உள்ள கடல் பகுதிகள் இந்தியாவுக்குச் சொந்தமானது. இது இயற்கை நமக்களித்த கொடை. கடலோர பாதுகாப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே, இங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இரவு உணவுக்காக பஞ்சாயத்து என்ற உணவகத்திற்கு மகளிரணி நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர். உள்ளூர் பஞ்சாயத்தே நடத்துவதால், பஞ்சாயத்து என்றே பெயர் வைத்து விட்டனர். சூரை மீன், லகூன் மீன் பரிமாறினார்கள். மறுநாள் டிசம்பர் 23-ம் தேதி காலை, கண்ணாடி படகில், தீவு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். படகின் அடிப்பகுதி கண்ணாடியால் ஆனது என்பதால், பவளப் பாறைகளை பார்க்க முடிகிறது. கடலுக்கு அடியில் பவளப் பாறைகளை பல வண்ணங்களில் பார்ப்பது பேரனுபவம். பவளப் பாறைகள் பல வண்ணங்களில் மின்னுகிறது. இந்த பவளப் பாறைகளைச் சுற்றிதான் பல வகைகயான மீன்கள் இருக்கின்றன.
பவளப்பாறைகளை சுற்றிதான் கடல் வெள்ளரி எனப்படும் மீன் போன்ற உயிரினம் உள்ளது. இது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஜப்பானில் அதிகம் விரும்பப்படுவதால், கடத்தல்காரர்கள், சட்ட விரோதமாக வாங்கிச் செல்வதாக கூறினார்கள்.லட்சத் தீவுகளைப் பொறுத்தவரை பெண்கள் அதிகமாக வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. மீன்கள் காய வைக்கும் பணியில் கூட ஆண்கள்தான் செய்கிறார்கள். இப்போது சுய உதவிக்குழுக்கள் வந்த பிறகுதான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வருகிறார்கள். பெண்களுக்கான தொழில் திட்டங்கள் இருப்பதும் இதற்கு காரணம். கனரா வங்கி, எஸ்.பி.ஐ., வங்கி உள்ளது. அங்கு பணிபுரியும் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் பெண்கள். அதுவும் தீவு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது மகிழ்ச்சி அளித்தது. கனரா வங்கிக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் உரையாடினோம்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்வது உண்மையிலேயே லட்சத்தீவு மக்கள்தான். லட்சத்தீவுகளில் பாஜக மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. தற்போது தேசியவாத காங்கிரஸ் எம்.பி. இருக்கிறார். அக்கட்சியை சேர்ந்த பலர் என்னை சந்தித்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பாஜக என்று சொன்னார்கள். ஆனால், கடந்த எட்டரை ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில், அது உண்மையல்ல என்பதை புரிந்து கொண்டோம். பாஜகவில் சேர ஆர்வமாக இருக்கிறோம் என்றார்கள். முஸ்லிம்கள் குறிப்பாக முஸ்லிம் பெண்கள் பாஜகவில் சேர அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியாக இருந்தது.
லட்சத் தீவுகளில் மீன் வகைகள், தேங்காய் தவிர, அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மற்ற அனைத்தும் வெளியில் இருந்துதான் வந்தாக வேண்டும். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் என சில வகை காய்கறிகளை, சிறிய அளவில் விளைவிக்கிறார்கள். உணவு முறை என்பது கேரள உணவு முறைதான். எந்த உணவாக இருந்தாலும் அதில் தேங்காய் இல்லாமல் இருக்காது. இனிப்புகூட தேங்காய் பாலில்தான் செய்கிறார்கள். மாடுகள் மிகக்குறைவாக இங்கு வளர்க்கப்படுகின்றன. அதனால், மாட்டுப்பால் கிடைப்பதும் அரிது.
காலை உணவாக அரிசி மாவில் செய்யப்படும் அடை, புரோட்டா போன்ற ரொட்டி சாப்பிடுகிறார்கள். மதியமும், இரவும் அரிசி சாதம். களஞ்சி என்ற அடை போல ஆனால், பெரிதாக செய்து, தேங்காய் பால் ஊற்றி சாப்பிடுகிறார்கள். அசைவம் முக்கிய உணவாக உள்ளது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள். மரங்களுக்கு வர்ணம் அடித்திருப்பது பார்க்க மிக அழகாக இருக்கிறது. தேங்காய் சிறியதாக இருக்கிறது. ஆனால், அதில் உள்ள பருப்பு தடிமனாக உள்ளது. தேங்காய் எண்ணெய் அதிகமாக கிடைக்கும் என்றார்கள். லட்சத்தீவுகளில் உரம், பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்ட ரசாயனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு தேங்காய் எண்ணெய்தான் முழுமையான ஆர்கானிக் எண்ணெய்.
தேங்காய் பூ சாப்பிடுகிறார்கள். இதில் இருந்து அதிகமான புரோட்டீன் அவர்களுக்கு கிடைக்கிறது. விவசாயம் என்பது சிறிய அளவில்தான் நடக்கிறது. தேங்காய் துறுவல் கருவாடு கொண்டு தயாிக்கப்படும் சம்பந்தி போல தயாரித்து சாப்பிடுகிறார்கள்.
நம்மூரில் கடற்கரைக்கு சென்றால் மீன், கருவாடு வாடை அடிக்கும். இங்கும் கருவாட்டிற்காக மீன்கள் காய வைத்துள்ளனர். ஆனால், வாடை என்பதே இல்லை. கடற்கரையும் அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. மக்கள் குறைவாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இங்குள்ள தூய்மையை பேணுகிறார்கள். குப்பைகளை எங்கும் பார்க்க முடியவில்லை. அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்றேன். தனியார் கான்வென்ட் போல அற்புதமாக பராமரிக்கிறார்கள். கழிவறை அவ்வளவு சுத்தமாக இருந்தது. ஊட்டச்சத்து உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள்.
லட்சத்தீவுகளில் நாய்கள் இல்லை. பாம்புகள் இல்லை. திருடர்கள் இல்லை. மதுபான கடைகள் இல்லை. ரசாயன உரங்கள் இல்லை. அதனால், மக்களிடம் நிம்மதியும், மகிழ்ச்சியான வாழ்வும் இருக்கிறது. இயற்கையின் அற்புதமான லட்சத் தீவை விட்டு செல்லவே மனமில்லை.
இப்போதெல்லாம் சுற்றுலா என்றால், அருவிகள், மலைக்குன்றுகள், காடுகள், வயல்வெளிகள் என்று இயற்கையை ரசிப்பதாக இல்லை. மாறாக, கேளிக்கை மட்டுமே என்றாகி விட்டது. இயற்கையை ரசிப்பவர்களுக்கு லட்சத் தீவுகள் ஒரு சொர்க்க பூமி. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
-
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!












Click it and Unblock the Notifications