ஸ்படிகம் போல கடல் .. மனதை கொள்ளை கொள்ளும் லட்சத்தீவு.. பட்ஜெட்டுக்கு ஏற்றது.. மோடிக்கு குஷ்பு நன்றி
சென்னை: லட்சத்தீவு இயற்கை அழகு மனதை மயக்கும் என்று குஷ்பு கூறியுள்ளார். ஸ்படிகம் போன்ற தெளிவான கடல்,விலையுயர்ந்த மாலத்தீவுகளுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட்டுக்கு ஏற்றது என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு. எங்களின் சொந்த லட்சத்தீவு பற்றி நினைவூட்டியதற்காக பாரதபிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.
பாரத பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2ஆம் தேதி அரசு முறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர்சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அத்துடன் "சுற்றுலா செல்ல விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

பிரதமரின் பயணம் காரணமாக இரண்டு நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில் மாலத்தீவு துணை அமைச்சர்கள் மரியம்ஷியுனா, அப்துல்லா மஹ்சூம் மஜித், மால்ஷா ஷெரீப் ஆகியோர் பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
மாலத்தீவுக்கு மாற்றாக லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலா தலமாகமாற்ற பிரதமர் மோடி முயற்சி செய்கிறார் என்று குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம் குறித்து மாலத்தீவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இதனிடையே, இந்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதற்கு பதில் உள்நாட்டில் உள்ள மாற்று இடங்களை பரிசீலிக்க வேண்டும் என்று இந்தியர்களுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து ஏற்கெனவே மாலத்தீவு செல்ல திட்டமிட்டிருந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் விமான டிக்கெட் மற்றும் ஓட்டல் அறை முன்பதிவுகளை ரத்து செய்தனர். இது பலத்த அடியாக மாலத்தீவுக்கு அமைந்தது. நம்முடைய நாட்டு கடற்கரைகளைப் பற்றி பலரும் பதிவிட்டு வருகின்றனர். லட்சத்தீவு குறித்தும் அங்கு சுற்றுலா சென்றது பற்றியும் குஷ்பு தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லட்சத்தீவுக்கு ஏற்கனவே சுற்றுலா சென்றதை நினைவுபடுத்துகிறேன். அதன் இயற்கை அழகில் எப்போதும் மயங்கியிருக்கிறேன். கிரிஸ்டல் போன்ற தெளிவான கடல் நீர், ஸ்நோர்கெலிங், ஸ்பீட் ஜெட் படகு சவாரி செல்வது பிடித்தமானது. கடலில் மிதந்து கொண்டே அழகான வண்ண மீன்களை பார்ப்பது கண்களுக்கு விருந்தாகும்.
விரைவில் மீண்டும் லட்சத்தீவு செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன். இது பயமுறுத்தும் விலை உயர்ந்த மாலத்தீவுகளுடன் ஒப்பிடுகையில் பட்ஜெட்டிற்கு ஏற்றது. எங்களின் சொந்த லட்சத்தீவு பற்றி நினைவூட்டியதற்காக பாரத பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.












Click it and Unblock the Notifications