சர்வேயர் டூ டிஆர்ஓ.. 388 ஏக்கர் புஞ்சை நிலம்.. ரூ.10 கோடி நில அளவீடு.. விருதுநகரில் தமிழக அரசு மாஸ்
சென்னை: இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் குறித்த, முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக, திமுக அரசு தொடர்ந்து விரோதமாக செயல்பட்டு வருவதாக இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது..

குறிப்பாக, கடந்த 75 வருடங்களாக தமிழகத்தை ஆண்டு வருகின்ற திராவிட அரசியல்வாதிகளால் பத்தாயிரம் கோயில்களும் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் அழிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போனதாக இந்து சமய அறநிலையத் துறை ஆவணங்கள் மூலம் தெரிய வருகிறது என்று இந்து முன்னணி புகார் கூறிவருகிறது.
அரசியல்வாதிகள்: அதுமட்டுமல்ல, இந்து கோயில்களின் சொத்துக்களை அரசாங்கம் திட்டமிட்டு சூறையாடுவதாகவும், ஆக்கிரமித்து கோயில் நிலங்கள் காணாமல் போக அதிகாரிகள் அரசியல்வாதிகள் துணை போவதாகவும் வெளிப்படையாக குற்றஞ்சாட்டுகிறது.
தமிழக கோயில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி, சில நாட்களுக்கு முன்பு போராட்டத்தையும் தமிழகமெங்கும் நடத்தியிருந்ததுடன்,கோயில் இடங்களில் குத்தகை, வாடகை தராமல் ஆக்கிரமித்துள்ளவர்கள் பட்டியல் ஒவ்வொரு கோயில் வாசலிலும் பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று புதிய கோரிக்கையையும் இந்து முன்னணி சமீபத்தில் விடுத்திருந்தது.
கோவில் நிலங்கள்: இதுஒருபுறமிருந்தாலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க தமிழக அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காகவே மாவட்டந்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. மேலும், அதிகாரிகளும் கோவில்களில் நேரடி ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது.
விசாரணை: இதையடுத்து, மாவட்ட டிஆர்ஓ தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது... அத்துடன், 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.
அதுமட்டுமல்லாமல், தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன..
வட்டாட்சியர் மாரிமுத்து: இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து சொல்லும்போது, உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாதுகாக்க நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால், ஏற்கனவே, வழக்கு ஒன்றில், கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் தாமாக முன்வந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க விளம்பரம் வெளியிடுக என்று தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.. குறிப்பாக, கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் வழக்கு ஒன்றில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications