நில அளவை ஆவணங்கள்.. வருவாய் துறையிலிருந்து நில அளவைத்துறை பிரிக்க போகிறார்களா? தமிழக அரசு முடிவென்ன?
சென்னை: வருவாய் துறையிலிருந்து நில அளவை துறையை தனியாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.. இதுகுறித்து தமிழக அரசு என்ன முடிவெடுக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நில அளவுகள் என்பது, ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாக மாறுபட கூடியது.. நில சர்வே எண் என்பது ஒரு நிலம் அல்லது மனைக்கு ஒதுக்கப்பட்ட தனித்துவமான எண் ஆகும். அதிகாரிகளால் வழங்கப்படும் இந்த எண், ஒரு நிலத்தை அடையாளம் காண பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு நிலங்களின் பதிவேடுகள் நில சர்வே எண்களின் உதவியுடன் பராமரிக்கப்படுகின்றன... சர்வே 2 பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது... நீங்கள் ஒரு இடம் வாங்கினால், அந்த மனை, யார் பெயருக்கு யாரிடமிருந்து பெறப்பட்டிருக்கிறது என்றெல்லாம், 30 வருடங்களுக்கு அதற்கான மூலப்பத்திரங்களைக் கொண்டு சரிபார்க்க வேண்டும்..
வருவாய்த்துறை: நீங்கள் வாங்க போகும் சொத்தின் இப்போதைய ஓனர் பெயரில் உள்ள பத்திரங்களைக் கட்டாயம் சரிபார்க்க வேண்டும். இதன் மூலம் வருவாய்த்துறை ஆவணங்களில் அந்தச்சொத்து யார், யாரிடமிருந்து கைமாறியிருக்கிறது என்பதையும் சரிபார்த்து கொள்ளலாம். அதாவது வருவாய்த்துறையில், நில அளவை செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நில அளவை துறை, 160 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவளத்துறை வருவாய்த் துறையுடன் இணைந்தே செயல்படுகிறது. நிலவரி, நிலநிர்வாகம், சீர்திருத்தம் மற்றும் சட்டம் ஒழுங்கு, சான்றுகள் வழங்குதல், பேரிடர் மேலாண்மை போன்ற அரசின் முக்கிய செயல்பாடுகளை இந்த துறை கவனிக்கின்றது.
அதேசமயம் நிலம் தொடர்பான அளவீடுகள், நிலம் பிரிவு, பட்டா வழங்குதல் மாறுதல் உள்ளிட்ட வருவாய்த்துறையின் பல பணிகளை அதன் கீழ் செயல்படும் நிலஅளவைத் துறை கவனிக்கிறது. நிலஅளவைக்கென சர்வேயர்கள், ஆய்வாளர்கள், உதவி இயக்குனர், இயக்குனர்கள் என தனி அலுவலர்கள் இருந்தாலும், இந்த துறை ஊழியர்கள் வருவாய், நிலஅளவை என 2 பிரிவு அதிகாரிகளுக்கும் கீழ் செயல்பட வேண்டியிருக்கிறது.
கோரிக்கைகள்: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ஒரு பிரிவாகவே, நில அளவை துறை இயங்கி வருவதால்தான், நில அளவை துறையை பிரித்து, தொழில் நுட்ப துறையாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை புதிதாக எழுந்துள்ளது.. இந்த கோரிக்கையை நில அளவை துறை அலுவலர் சங்கம் வலியுறுத்தியிருக்கிறது..
இதற்கு காரணம், பட்டா வழங்கல், நிலங்களை அளப்பது தொடர்பான விஷயங்களில், வருவாய் துறை அதிகாரிகளுக்கும், நில அளவை துறை அதிகாரிகளுக்கும், அடிக்கடி கள நிலையில் மோதல்கள் வந்துவிடுகிறதாம்.. அதனால்தான், நில அளவை துறையை, வருவாய் துறையில் இருந்து பிரிக்க வேண்டும் என்று கோரிவருகிறார்கள். தமிழக நில அளவை துறை அலுவலர் சங்க மாநில மாநாடு நடந்து முடிந்துள்ள நிலையில், இப்படி ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
நிலஅளவை துறை: இதே கோரிக்கையை இப்போது, நிலஅளவைத்துறை அலுவலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.. வருவாய்த்துறையில் இருந்து நிலஅளவைத் துறையை பிரித்து நவீனப்படுத்தி நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாநில தலைவர் ராஜா இதுகுறித்து கூறும்போது, "வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் நில அளவை துறைதான் நிலம் தொடர்பான பெரும்பாலான பணிகளை மேற்கொள்கிறது. இந்த துறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. ஆவணங்களை பாதுகாக்க வேண்டியுள்ளதால் நிலஅளவைத் துறையை மேம்படுத்த போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
ஆவணங்கள்: நிலஅளவை ஆவணங்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த பணிக்கும், புலஉதவியாளர்களாகவும் நிரந்தர ஊழியரை நியமிக்க வேண்டும். தொழில்நுட்பம் பெருகிவிட்ட நிலையில், இந்த துறையை தனித்துறையாக பிரித்து, நவீனப்படுத்தி நிர்வகிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications