நில அளவீடு.. சர்வேயரை விடுங்க.. நில அளவைக்கு தேவையான உபகரணம் எங்கே? திரண்ட விஏஓக்கள்.. என்னாச்சு
சென்னை: வருவாய்த்துறையில் நில அளவீடு விவகாரத்தில் தமிழக அரசு வெவ்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில் பயிர் சாகுபடியில் நில அளவீட்டில் புதிய கோரிக்கை ஒன்று சென்னையில் விஏஓக்கள் மத்தியில் வெடித்துள்ளது. இதுசம்பந்தமான கோரிக்கை, தமிழக அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர், பட்டா பெற விண்ணப்பித்து வரும் நிலையில், அதனை எளிமைப்படுத்தவும், மக்களின் அலைச்சலை குறைக்கவும், தமிழக அரசு ஏராளமான வசதிகளை செய்து தந்து, அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.

பட்டா மாறுதல்: அந்தவகையில், பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தையும் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் நிறைய இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில் பிழைகள் ஏராளமாக வருவதையும் களைய வேண்டியிருக்கிறது.
எனவே, நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்துவதற்காக, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்தது.. இதற்காகவே, சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும் என்றும், நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும் என்றும் அதிகாரிகளும் உறுதி தந்திருந்தனர்.
நில அளவை: அதன்படி, சென்னை அண்ணா பல்கலையில், நில அளவை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 1.47 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடங்களை வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கடந்த வாரம் திறந்து வைத்தார். சர்வேயர் வரும்வரை பொதுமக்கள் நீண்ட காலம் காத்திருக்காதவண்ணம், நில அளவை பணிகள் உடனே செய்து தரப்படும் என்றும் அப்போது அமைச்சர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பயிர் சாகுபடியில் நில அளவைக்கு தேவையான உபகரணங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கிறது.. தமிழகத்தில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களை, டிஜிட்டல் முறையில் அளவீடு செய்யும் திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது.. இதற்கான பணிகளை, கிராம நிர்வாக அலுவலர் வழியாக மேற்கொள்ள, தமிழக அரசு முடிவு செய்தது.
மதிப்பூதியம்: இந்த பணிகளை செய்வதற்கு, மதிப்பூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை, கிராம நிர்வாக அலுவலர்கள் ஏற்கனவே முன்வைத்திருந்தனர்.. இது தொடர்பாக, கடந்த ஜனவரி 8ம் தேதி, வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர்.
அப்போது, நில அளவைக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கும், பதிவுக்கு 10 ரூபாய் வழங்குவதற்கும் அதிகாரிகள் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உரிய நேரத்தில் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை என்ற புகார் கிளம்பியிருக்கிறது. மதிப்பூதியம் வழங்கப்படாததால், விஏஓ-க்கள் அந்த பணிகளை ஏற்கனவே புறக்கணித்திருந்தனர்..
நில அளவை பணி: இந்நிலையில், நேற்று மறுபடியும் சென்னையில் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் அமைப்புகளின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான உடன்பாடும் இதில் எட்டப்படவில்லை. இதையடுத்து, டிஜிட்டல் நில அளவை பணியை முற்றிலுமாக புறக்கணிப்பதாக, அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் அதிரடியாக அறிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications