இலவச லேப்டாப் வழங்குவதில் பாகுபாடு? இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்களுக்கா? நயினார் நாகேந்திரன் காட்டம்
சென்னை: "கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது 20 லட்சம் தமிழக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் கொடுக்கப்படும் என்று கூறி சுமார் ரூ.2,000 கோடியை ஒதுக்கிய திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்ச மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை." என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் தருவாயில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. கொரோனா பரவல் காலகட்டத்தில் இந்தத் திட்டம் முடங்கியது. இந்நிலையில் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், திமுக அரசால் மீண்டும் செயல்படுத்தப்பட இருக்கிறது.

2025-26 நிதியாண்டில், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மே மாதம் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இந்த நிதியாண்டில் மாணவர்களுக்கு லேப்டாப் அல்லது டேப்லெட் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழக அரசு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கியது.
கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் தரப்போகிறோம் என அண்மையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்திருந்தார். கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச அளவில் டெண்டர் கோரியது. டெல், ஏசர் ஆகிய நிறுவனங்கள் குறைந்த தொகைக்கான டெண்டர் கோரின.
தயார் நிலையில் உள்ள லேப்டாக்கள் தமிழகத்துக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. விரைவில் மீதமுள்ளவையும் வந்து சேர்ந்ததும், அவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்னரே மாணவர்களுக்கு லேப்டாப்களை விநியோகிக்க வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த ஆண்டு 10 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே லேப்டாப் வழங்கப்பட உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மற்ற மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
"இலவச மடிக்கணினிகள் வழங்குவதில் எதற்கு இத்தனைப் பாகுபாடுகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே? கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது 20 லட்சம் தமிழக மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்கப்படும் என்று கூறி சுமார் ரூ.2,000 கோடியை ஒதுக்கிய திமுக அரசு, தற்போது வெறும் 10 லட்ச மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருப்பது அப்பட்டமான ஏமாற்று வேலை.
பல லட்ச மாணவர்கள் உள்ள தமிழகத்தில் வெறும் 10 லட்ச மாணவர்கள் மட்டும் எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்படுகிறார்கள்? மேடையில் பகுத்தறிவு பேசிக்கொண்டு திரைமறைவில் எதற்கு இத்தனை பாகுபாடுகள்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமாக, 2011 முதல் தமிழகத்தில் நடைமுறையில் இருந்த இலவச மடிக்கணினி திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் ஒழித்துக் கட்டிவிட்டு தேர்தல் நெருங்கும் சமயத்தில் மீண்டும் அத்திட்டத்தைத் தூசி தட்டி எடுத்தால் முதல் தலைமுறையினர் மயங்கி திமுகவிற்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா?
அதுமட்டுமன்றி ஆட்சி முடிய இன்னும் 70 நாட்களே உள்ள நிலையில் இந்தத் திட்டத்தை இப்போது அவசர அவசரமாக அமல்படுத்தத் துடிப்பது ஏன்? குடிநீர், கழிவறை, பேராசிரியர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத அரசுக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் திமுக அரசின் துரோகத்தை எப்படி மன்னிப்பார்கள்?
அதுவும், ஓராண்டு கால ஆட்சியை வைத்துக் கொண்டு இரண்டு வருடங்களில் 20 லட்ச மாணவர்களுக்கு மடிக்கணினி என்று பட்ஜெட் ஒதுக்கியது ஏன்? அடுத்த ஆட்சிக்கும் சேர்த்து பட்ஜெட் போடும் அதிகாரத்தைத் திமுகவிற்கு யார் கொடுத்தார்கள்? எப்படியும் அடுத்தமுறை ஆட்சிக்கு வரமாட்டோம் என்று தங்கள் இஷ்டத்திற்கு பட்ஜெட்டை ஒதுக்கி திமுக கொள்ளையடிப்பதற்கு மாணவர்களின் ஆசைகளும் கனவுகளும் பலியாக வேண்டுமா?














Click it and Unblock the Notifications