அசரடித்த பிடிஆர்.. மற்ற துறைகளைவிட.. பள்ளிக்கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு தாராளம்.. பட்ஜெட்டில் செம
2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் கல்வி துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
சென்னை: திமுக அரசு பொறுப்பேற்று இரண்டாவது முறையாக தாக்கல் செய்யும் பட்ஜெட் இது. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் மற்ற எல்லா துறைகளையும் விட கல்வி துறைக்குதான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த 2021ம் ஆண்டு புதியதாக பதவியேற்ற திமுக அரசு எதிர்கொண்ட முதல் சவால் நிதி பற்றாக்குறைதான். வருவாய் பற்றாக்குறையை கணிசமான அளவில் குறைக்க வேண்டும் என்கிற நெருக்கடியில் திமுக அரசு இருந்தது. இந்த பின்னணியில்தான் முதல் பட்ஜெட் கடந்த 2022ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் இதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதனை தமிழ்நாடு அரசு சாதித்து காட்டியிருக்கிறது.
அதாவது திமுக ஆட்சிக்கு வந்தபோது ரூ.62,000 கோடியாக வருவாய் பற்றாக்குறை இருந்தது. ஆனால், தற்போது இது ரூ.30,000 கோடியாக குறைந்திருக்கிறது. அப்படியெனில் மாநிலத்தின் வருவாய் அதிகரித்துள்ளது. என்று அர்த்தம் எனவே திட்டங்களுக்கு கடந்த ஆண்டை விட கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் தொடங்கியதிலிருந்து பல்வேறு திட்டங்களுக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே நீடித்திருந்தது. அதில் முக்கியமானது மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை.

மகளிருக்கான அறிவிப்பு
ஏற்கெனவே மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து தொடர்பான அறிவிப்பு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ரூ.1,000 உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் என்று பலரும் கேள்வியெழுப்பியிருந்தனர். இது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி தகுதியான பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இது செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர முக்கிய துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி விவரங்கள் பின்வருமாறு,

சிறு, குறு தொழில்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காக ரூ.4,778 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் - தலைமுறை தொழில்முனைவோர் தொழில் மேம்பாட்டுத் திட்டத்தில் (NEEDS), 144 கோடி ரூபாய் அளவிலான மானியத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்பதுன் இதில் சிறப்பு செய்தியாகும். அதேபோல, குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு, உரிய நேரத்தில் பணம் அளிக்கப்படுவதை உறுதிசெய்ய 'மின்னணு வர்த்தக வரவு தள்ளுபடி'(TReDS) தளத்தில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இணைவதை தமிழ்நாடு அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனை செய்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்
அதேபோல மற்றொருபுறம், நகர்ப்புற பகுதிகளிலும் ஊரகப்பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்வது, முழுமையான சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த 'அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்' நடைமுறைப்படுத்தப்படுவது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,513 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த துறையின் மூலம் 'அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்' எனும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. அதாவது அரசு சுயதொழிலுக்காக வழங்கும் மானியம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு குறைவான அளவில்தான் சென்று சேர்கிறது. எனவே இந்த திட்டத்தின் மூலம் அவர்களை சுயதொழில் செய்ய ஊக்குவிக்கும் விதமாக இம்மக்களுக்கு 35 சதவீதம் மூலதன மானியமும் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும்.

கல்வி
இது தவிர, நீர் வளத்தை மேம்படுத்த ரூ.8,232 கோடி, எரிசக்திக்கு ரூ.10,694 கோடி, காவல்துறைக்கு ரூ.10,812 கோடி, மக்கள் நல்வாழ்வுக்கு ரூ.18,661 கோடி, போக்குவரத்திற்கு ரூ.8,056 கோடி, சமூக நலனுக்கு ரூ.7,745 கோடி், நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு ரூ.19,465 கோடி, ஊரக வளர்ச்சிக்கு ரூ.22,562 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர அதிகப்பட்சமாக நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.38,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றையும் விட இருப்பதிலேயே கல்வி துறைக்குதான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கல்வி துறைக்கு ரூ.47,266 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அரசு பள்ளி, கல்லூரி கட்டிடங்களை மேம்படுத்துதல், புதியதாக கட்டுதல், மாணவர்களுக்கான உதவி தொகை, மத்திய மற்றும் காலை உணவு திட்டத்திற்கான நிதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களை ஊக்குவிக்க சிறப்பு உதவி தொகை என அனைத்திற்கும் சேர்த்து ரூ.38,444 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.












Click it and Unblock the Notifications