"ஒற்றைத் தலைமை".. ஓபிஎஸ் படித்து படித்து சொல்லியும்.. மீட்டிங்கில் அதிர்ந்த கோஷம்.. பரபர சம்பவம்
சென்னை: அதிமுக கட்சிக்கு ஒற்றைத்தலைமை வேண்டும், ஓபிஎஸ் வாழ்க என்று நிர்வாகிகள் கோஷம் எழுப்பியதாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில் இன்று சென்னையில் அதிமுக கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட செயலாளர்கள் உடன் இதில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனை
அதோடு சசிகலா அதிமுகவை கைப்பற்ற நினைப்பது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. முக்கியமாக அதிமுக - பாஜக கூட்டணியில் கடந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள், முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து இதில் ஆலோசனை மேற்கொள்கிறார்கள்.

என்ன
இந்த நிலையில், இந்த கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வந்த போது, அதிமுக தொண்டர்கள் எழுப்பிய கோஷத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கட்சிக்கு ஒற்றைத்தலைமை வேண்டும், ஓபிஎஸ் வாழ்க.. ஓபிஎஸ் ஐயா நீங்கதான் வர வேண்டும் என்று நிர்வாகிகள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே சலசலப்பு ஏற்பட்டது.

சலசலப்பு
அதிமுகவில் இப்போதுதான் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே நிலவி வந்த பிளவு கொஞ்சம் குறைந்து இணக்கம் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், திடீரென தொண்டர்கள் இப்படி கோஷம் எழுப்பியது மீண்டும் மோதலை உண்டாக்கி உள்ளது. முன்னதாக அதிமுக தொண்டர்கள் யாரும் எங்களின் பெயர்களை கோஷத்திற்கு பயன்படுத்த கூடாது. இது எம்ஜிஆர், ஜெயலலிதா கட்சி.

அவர்களின் பெயர்
இதனால் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பாராட்டி மட்டுமே கோஷம் எழுப்ப வேண்டும். கோஷம் மற்றும் கட் அவுட்களில் கண்ணியம் காக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் இரண்டு முறை குறிப்பிட்டார். ஓ.பன்னீர்செல்வம் இப்படி கோரிக்கை வைத்தும் கூட நிர்வாகிகள் இப்படி கோஷம் எழுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications